சீரற்ற காலநிலையால் பாதிக்கும் மாணவர்களுக்கு விசேட ஏற்பாடு

 க.பொ.த சா/த பரீட்சை இன்று

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை நாடு பூராவும் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் 433,050 பேரும் தனியார் விண்ணப்பதாரிகள் 283,958 பேரும் என மொத்தமாக 71,7008 பேர் நாடெங்கிலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன் பரீட்சைக்கான இணைப்பு நிலையங்களாக 541 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்அவர்தெரிவித்தார். தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தமக்கு அண்மையிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை

காரணமாக பதுளை மாவட்டத்தில் பஸ்ஸறை, நுவரெலியா மற்றும் வலப்பனை, கிழக்கில் காத்தான்குடி பிரதேசங்களில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

எனினும் காலநிலை சீரடைந்து வருவதால் அவசியம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தயார் நிலையிலேயே உள்ளதாகவும் தேவையான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை இம்முறை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையங்கள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை