இன்று 8.09முதல் 11.25வரை இவ்வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்

இன்று 8.09முதல் 11.25வரை இவ்வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்

வடக்கில் தொலைநோக்கிகளுடன் விஞ்ஞானிகள் குழு
யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவில் அவதானிப்பு முகாம்கள்

ஒன்பது ஆண்டுகளின் பின்னர் கங்கண சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான அரிய வாய்ப்பு இலங்கை மக்களுக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பீட சிரேஷ்ட பேராசியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் நேற்று தெரிவித்தார். 

இலங்கை நேரப்படி, இன்று காலை 8.09முதல் 11.25வரையான மூன்று மணி நேரம் 15நிமிடங்களும் இடம்பெறும் இக்கிரகணத்தை வடபகுதி மக்களால் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் இச்சூரிய கிரகணத்தின் உச்ச நிலையாக காலை 9.35முதல் காலை 9.37வரையான காலப்பகுதி விளங்கும்.  

இக்காலப்பகுதியில் கிளிநொச்சியில் 3நிமிடங்களும் 16.9வினாடிகளும், யாழ்ப்பாணத்தில் 3நிமிடங்களும் 11.8வினாடிகளும், திருகோணமலையில் 2நிமிடங்களும் 41.5வினாடிகளும் என்றபடி மோதிர வடிவிலான கங்கண மற்றும் பகுதியளவிலான சூரிய கிரகணத்தையும் காலி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், கண்டி பிரதேச மக்களால் பகுதியளவிலான சூரிய கிரகணத்தையும் பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இச்சூரிய கிரணகத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகத்துடனும் மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைகழகத்துடனும் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சுடனும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.  

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மைதானத்திலும், கிளிநொச்சி பொறியியல் பீட நிர்வாகக் கட்டத்திற்கு அருகாமையிலும் இரண்டு அவதானிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

இந்த முகாம்கள் ஊடாக இந்த அரிய வகை சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்காக நேற்று நண்பகல் வரையும் 1800பேர் வரைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் ரவி ராஜன் சுமார் ஜயாயிரம் பேரளவில் பார்க்க வருகை தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் இதன் நிமித்தம் விஷேட தொலைநோக்கிகளும் கண்ணாடிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.  

இதேவேளை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் இரணைமடுவிலும், நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிலையம் மன்னாரிலும், இராணுவத்தினர் முல்லைத்தீவிலும் இச்சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைத்துள்ளனர்.  

இச்சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களாலோ, கறுப்பு கண்ணாடி அணிந்தோ பார்க்கக்கூடாது. ஏனெனில் சூரியனில் இருந்து வரும் ஊதாக்கதிர்கள் கண்களின் விழித்திரையைப் பாதித்து பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. அதனால் கண்பார்வைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான பாதுகாப்புகளுடன் கூடிய கண்ணாடி மற்றும் தொலைநோக்கிகளின் ஊடாகப் பார்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்ணியல் விஞ்ஞான மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளர் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மர்லின் மரிக்கார்

Thu, 12/26/2019 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை