குடிவரவு - அகல்வு தடுப்பு முகாமில் 75 கைபேசி, 5 மடிகணனிகள் மீட்பு

குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 118வெளிநாட்டு பிரஜைகள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முகாமில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 75கையடக்க தொலைபேசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து75கையடக்கத் தொலைபேசிகள், 5மடி கணனிகள் மற்றும் 1, 56,000ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்தார்.

மிரிஹான தடுப்பு முகாமில் பணம் மற்றும் கிரடிட் கார்ட் மோசடிகள் இடம்பெறுவதாக கிடைத்துள்ள தகவல்களுக்கிணங்க குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த கைதிகளில் 55நைஜீரிய பிரஜைகள் உள்ளடங்கியுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வந்திருந்த இவர்களில் பெரும்பாலானோர் நிர்மாணத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர். தமது விசா காலம் முடிவடைந்த பின்னரும் அவர்கள் இலங்கையில் தங்கி இருந்ததுடன் குடிவரவு குடியகல்வு புலனாய்வுப் பிரிவு அவர்களை கைது செய்துள்ளது.

மிரிஹான தடுப்பு முகாமில் வைத்து அவர்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டு விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான விபுல காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகள் மிரிஹான பொலிஸ் தலைமையக பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் மோப்ப நாய்களும் இந்த சுற்றி வளைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/06/2019 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை