வடக்கு, கிழக்கு உட்பட 5 மாவட்டங்களில் கடும் மழையுடன் சீரற்ற காலநிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இச்சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அடுத்துவரும் சில தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் குறிப்பிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் 238.7மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 17மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 13,542குடும்பங்களைச் சேர்ந்த, 45,858பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், 8பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள 22மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந் நிதி மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் கீழ் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு அடிப்படை நிவாரண நிதியாக 3.7மில்லியன் ரூபா வழங்கப்படும் எனவும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனர்த்தம் காரணமாக 116பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 44, 147பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில்; 150மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாககக் கூடும்.

சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75தொடக்கம் 100மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். நாடு முழுவதும் பிற்பகல் 1மணிக்கு பின்னர் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் கரையோர பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 13,542குடும்பங்களைச் சேர்ந்த, 45,858பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 10023குடும்பங்களைச் சேர்ந்த 33,653பேரும், வடமாகாணத்தில் 971குடும்பங்களைச் சேர்ந்த 3067பேரும், சம்பரகமுவ மாகாணத்தில் 43குடும்பங்களைச் சேர்ந்த 179பேரும், மத்திய மாகாணத்தில் 302குடும்பங்களைச் சேர்ந்த 1150பேரும், வடமேல் மாகாணத்தில் 1422குடும்பங்களைச் சேர்ந்த 4734பேரும், வட மத்திய மாகாணத்தில் 263குடும்பங்களைச் சேர்ந்த 876பேரும், ஊவா மாகாணத்தில் 483குடும்பங்களைச் சேர்ந்த 2059பேரும், தென் மாகாணத்தில் 35குடும்பங்களைச் சேர்ந்த 140பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 4302பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையும் கூறியுள்ளது.

இதேவேளை, இத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6643பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலையால் நவம்பர் மாதம் முதல் நோய் தொற்றுக்கு உள்ளாகுவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் வட மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளாவிய ரீதியில் டெங்கு நோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.

குறித்த பிரிவின் உறுப்பினர் வைத்தியர் அநுர கருத்து வெளியிடுகையில், சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் 10ஆயிரம் ரூபா வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளின் பாதிப்பு அல்லது சொத்துகளின் பாதிப்பு தொடர்பில் அரசாங்கத்தால் மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படும். முழுமையாக பாதிப்படைந்த வீடுகளுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/07/2019 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை