48 நாடுகளுக்கான இலவச வீசா நடைமுறை

ஒருமாத காலம் நீடிப்பது  குறித்து அரசு ஆராய்வு

நடைமுறையை இரத்துச் செய்ய  கோருகிறது குடிவரவு திணைக்களம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக இலவச வீசா நடைமுறையை 48 நாடுகளுக்கு விஸ்தரிக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. இந்த இலவச வீசா நடைமுறை அடுத்த ஆண்டுடன் காலாவதியாகவுள்ளதால் அதனை மேலும் ஒருமாதகாலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் சுற்றுலா, விமானத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

என்றாலும், இலவச வீசா நடைமுறையால் 4 பில்லியன் ரூபா இலங்கைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இலவச வீசா நடைமுறையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தரவில்லையென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியதுடன், குறித்த நடவடிக்கையை இரத்துசெய்யுமாறு கோரியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சிகண்டிருந்ததுடன், உள்நாட்டில் பல்வேறு தேவைகளின் நிமித்த தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர்.

என்றாலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக பல நாடுகளுக்கு இலவச வீசா நடைமுறையை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இவ்வாண்டு இறுதியுடன் குறித்த இலவச வீசா முறைமையை காலாவதியாவதால் இதுகுறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வினவிய போது,

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மேலும் ஒருமாதகாலம் இலவச வீசா நடைமுறை தொடர வேண்டுமென்பதே எமது நோக்கமாகும்.

அதுதொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றார்.

இதேவேளை, இலவச வீசா நடைமுறையால் 4 பில்லியன் ரூபா இலங்கைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இலவச வீசா நடைமுறையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தரவில்லையென குடிவரவு மற்றம் குடியகல்வு திணைக்களம் சிபாரிசு செய்துள்ளது.

இது தொடர்பான வேறு தகுந்த முறையொன்று அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிக்கையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் 39 நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு இலங்கைக்கு வருவதற்கு இலவச விசா வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின்பேரில் இந்த இலவச வீசா நடைமுறை மீண்டும் மீள் அறிமுகம் செய்யப்பட்ட 39 நாடுகளுக்கு என முன்னர் இருந்த இலவச நடைமுறை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டது.

எனினும் இந்த நடைமுறை மூலம் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று குடிவரவு திணைக்களம் கூறுகிறது.

இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு ஒருவருக்கு 35 அமெரிக்க டொலர்கள் என்ற ரீதியில் விலக்களிக்கப்பட்ட விசா கட்டணத்தையும் கணக்கிட்ட போதே இந்த நடைமுறை மூலம் பாரிய நட்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

அத்துடன் சுற்றுலா பயணிகள் நேரடியாக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி அங்குள்ள பீடத்தில் இருந்து இலவச வீசாவை பெற்றுக்கொள்கின்றனர்.

இதனால் அவர்களது பின்னணி பற்றி எதுவும் தெரியாமல் போய்விடுகிறது என்று குடிவரவு திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

அதே நேரம் திட்டமிட்டபடி இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை கொண்டு செல்லப்பட்டால் மேலும் நட்டம் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி இலவச வீசா நடைமுறையினால் தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேஷியா, சுவிட்சர்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளும் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா , சீனா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பயன் பெறுகின்றனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை