பேராயர் 4 மணி நேரம் சாட்சியம்; இன்றும் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நான்கு மணிநேரம் சாட்சியமளித்தார். நேற்று பி.ப 2.00மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான பேராயர், மாலை 6.00மணிவரை சாட்சியம் வழங்கினார். இதன்போது இரண்டு மணித்தியாலங்கள் அவரிடம் இரகசியமாகவும் சாட்சியம் பெறப்பட்டது.

மேலும் இன்றைய தினமும் காலை 9.30மணிக்கும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு பேராயருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகளென நாட்டின் எட்டு இடங்களை இலக்குவைத்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இப் பயங்கரவாதத் தாக்குதல்களில் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என 350பேர்வரை உயிரிழந்ததுடன், 300இற்கும் அதிகனமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேற்படி குழுவானது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தியது.

என்றாலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது பக்கச்சார்பானதென தொடர்ந்து பலராலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், இதுதொடர்பில் விசாரணைகளை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் உட்பட பலரும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தனர். அதன் பிரகாரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஆணைனக்குழு விசாரணைகளை தொடர்ந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கடந்த மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. என்றாலும் மீண்டும் மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் ஆரம்பமாகியுள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/07/2019 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை