எதிர்க்கட்சி தலைவராக சஜித்; ஜனவரி 3இல் சபாநாயகர் அறிவிப்பார்

ஜனவரி 3 ஆம் திகதி 8 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதே தினத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவின் பெயர் சபாநாயகரினால் அறிவிக்கப்பட இருப்பதாக முன்னாள் சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார். சபாநாயகருக்கு அறிவிக்காமலே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒருமாத காலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பதை ஏற்கமுடியாது என்றும் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐ.தே.க முடிவு செய்துள்ளது. கட்சியின் முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளோம்.அவரும் அதனை அங்கீகரித்துள்ளார்.ஆனால் இந்த நியமனத்தை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும்.

பாராளுமன்றம் ஒருமாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. அதற்குப் பின்னர் ஓரிரு மணி நேரங்கள் பாராளுமன்றம் கூடி இந்த நியமனம் பற்றி அறிவிப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார். நாட்டுபிரச்சினைகளை ஆராய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜனவரி 3 ஆம் திகதி 8 ஆவது பாராளுமன்றக் கூடத் தொடரை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கும் ஜனாதிபதியின் உரைக்கும் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு விடயங்கள் குறித்து ஆராய்வது தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அறிய வருகிறது.

3 ஆம் திகதி பாராளுமன்றம் கூட முன்னர் நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படும் என அறிய வருகிறது.(பா)

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை