புர்கினா பாசோவில் பயங்கர தாக்குதல்; 31 பெண்கள் பலி

புர்கினா பாசோவில் பயங்கர தாக்குதல்; 31 பெண்கள் பலி-burkina faso-Deadly Attack-31 Women Killed

வடக்கு புர்கினா பாசோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற மோசமான தாக்குதலாக இது உள்ளது.  

சவுமா மாகாணத்தில் அர்பிண்டா நகர் மற்றும் இராணுவத் தளம் ஒன்றின் மீது இடம்பெற்ற இரட்டைத் தாக்குதல்களில் ஏழு படையினர் மற்றும் 80 ஆயுதமேந்திய போராளிகளும் கொல்லப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.  

சஹால் பிராந்தியம் எங்கும் வன்முறைகள் பரவியதை அடுத்து 2015 தொடக்கம் மாலி மற்றும் நைகர் நாடுகளை எல்லையாகக் கொண்ட புர்கினா பாசோ தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதோடு இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

“அர்பிண்டாவில் இராணுவத் தளம் மற்றும் பொதுமக்கள் மீது பெரும் தீவரவாதிகள் குழு ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியது” என்று முப்படைகளின் தளபதி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

“எமது படையினரின் தைரியமான நடவடிக்கையால் 80 தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது” என்று புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரே தெரிவித்தார். “இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்” என்று தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் 31 பேர் பெண்கள் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் மற்றும் அரசாங்க பேச்சாளர் ரெமிஸ் டன்ஜிநூ பின்னர் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாள் தேசிய துக்க தினத்தை ஜனாதிபதி அறிவித்தார்.  

காலை வேளையில் இடம்பெற்ற இந்த தாக்குதலின்போது பல டஜன் கணக்கான ஆயுதம் ஏந்திய தாக்குதல்தாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து பல மணி நேரம் தாக்குதல் நடத்திய நிலையில் படையினர் அவர்களை முறியடித்ததாக இராணுவம் குறிப்பிட்டது.  

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்காதபோதும், மத வன்முறைகள் நீடித்து வரும் புர்கினா பாசோவில் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவுடன் தொடர்புபட்ட குழுக்கள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

Thu, 12/26/2019 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை