ஆப்கான் ஜனாதிபதி தேர்தலின் முதல் கட்ட முடிவில் கனி 2ஆவது தவணைக்கு வெற்றி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட முடிவுகளில், தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கனி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி ஆப்கான் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதற்கட்ட தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கனி 50.64 வீதம் வாக்குகளை பெற்று முன்னிலை வகிப்பதாகவும், அவரை எதிர்த்து களம் கண்ட அப்துல்லா 39.52 வீதம் வாக்குகளை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆப்கானிஸ்தானில் 2ஆவது முறையாக அஷ்ரப் கனி மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், புகார்கள் இருந்தால் அதனை பதிவு செய்ய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதித் தேர்தல் முடிவுகளை வெளியிட வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆரம்ப முடிவு வெளியான விரைவிலேயே அதற்கு எதிராக முறையீடு செய்யப்போவதாக அப்துல்லாஹ் அலுவலகம் அறிவித்துள்ளது. “எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை இந்த மோசடியான முடிவை நாம் ஏற்கப்போவதில்லை என்பதை எமது மக்கள், ஆதரவாளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் எமது சர்வதேசக் கூட்டாளிகளுக்கு மீண்டும் ஒருமுறை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலிலும் அப்துல்லாஹ, அஷ்ரப் கனியிடம் தோற்ற நிலையில் ஏற்பட்ட பதற்ற சூழல் அமெரிக்காவின் தலையீட்டுடனேயே தீர்க்கப்பட்டது.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை