பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தோல்வி நெருக்கடியில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தோல்வி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

கராச்சியில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் பகல் போசண இடைவேளைக்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட் 39 ஓட்டங்களுக்குப் பறிபோனது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆரம்ப வீரர் ஓசத பெர்னாண்டோ ஒருமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் மறுமுனை விக்கெட்டுகள் வேகமாக பறிபோயின. குசல் மெண்டிஸ் வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த அஞ்சலோ மத்தியூசினால் 19 ஓட்டங்களையே பெறமுடிந்தது. தினேஷ் சந்திமால் (2), தனஞ்சய டி சில்வாவும் (0) கைகொடுக்கவில்லை.

எனினும் ஓசத பெர்னாண்டோ நேற்று ஆட்டநேர முடிவில் --102 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். நிரோசன் திக்வெல்ல 65 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி நான்காவது நாள் முடிவில் ---212 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்து தொடரை இழக்காமல் இருப்பதற்கு இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இன்று கடைசி நாளில் காத்துக்கொள்ள வேண்டிய சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை வெல்வதென்றால் இலங்கை இன்னும் -- 264 ஓட்டங்களை பெற வேண்டி இருக்கம்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை பெற்றது.

எனினும் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் முதல் நான்கு வரிசை வீரர்களும் சதங்களை பெற்று போட்டியை முழுமையாக தம்வசம் திசை திருப்பினர்.

ஆரம்ப வீரர்களான ஷான் மசூத், ஆபித் அலி முதல் விக்கெட்டுக்கு 278 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆபித் அலி மற்றும் அணித் தலைவர் அசார் அலி 77 ஓட்டங்களை பகர்ந்துகொண்டதோடு, அடுத்து ஜோடி சேர்ந்த அஸார் அலி மற்றும் பாபர் அஸாம் 148 ஓட்டங்களை பெற்றனர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழப்பதற்குள் 503 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷான் மசூத் 135, ஆபித் அலி 174, அசார் அலி 118 மற்றும் பாபர் அஸாம் ஆட்டமிழக்காது 100 என முதல் நான்கு வீரர்களும் சதம் பெற்றனர். டெஸ்ட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்களும் சதம் பெற்றது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக், வசீம் ஜாபர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டென்டுல்கர் ஆகிய முதல் நான்கு வீரர்களும் சதம் பெற்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 131 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 555 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 50 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட்டை வீழ்த்தி 193 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு மோசமான சாதனையாக பதிவானது. இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்சம் ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில் அதிய ஓட்டங்களை விட்டுக் கொடுத்தவராக அவர் பதிவானார். இதன்போது 2009 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக முத்தையா முரளிதரன் 1 விக்கெட்டை வீழ்த்தி 172 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த சாதனையையே அவர் முறியடித்தார்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை