பாகிஸ்தான் 263 ஓட்டங்களால் வெற்றி தொடரையும் 1-0 என கைப்பற்றியது

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை கைப்பறியது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, சமநிலையில் நிறைவடைய இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தொடரை 1--0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அத்தோடு, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான 60 புள்ளிகளையும் பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

பல்வேறு நெருக்கடி மற்றும் சவால்களுக்கு மத்தியில், 10 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி, இந்த வெற்றியின் ஊடாக திருப்தி கொண்டுள்ளது.

கராச்சி மைதானத்தில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில், ஷான் மசூத் 3 ஓட்டங்களையும், அபிட் அலி 38 ஓட்டங்களையும், அசார் அலி ஓட்டமெதுவும் பொறாத நிலையிலும், பாபர் அசாம் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அசாட் சபீக் 63 ஓட்டங்களையும் ஹரிஸ் சொஹைல் 9 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 4 ஓட்டங்களையும், யாசிர் ஷா மற்றும் மொஹமட் அப்பாஸ் ஆகியோர் தலா ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

ஷாயின் அப்ரிடி 5 ஓட்டங்களையும், நயீம் ஷா ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும், தில்ருவான் பெரேரா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும், ஹரிஸ் சொஹைல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 80 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இலங்கை அணிக்கு, பாகிஸ்தான் அணி, 476 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில், ஷான் மசூத் 135 ஓட்டங்களையும், அபிட் அலி 174 ஓட்டங்களையும், அசார் அலி 118 ஓட்டங்களையும், பாபர் அசாம் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 212 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது இலங்கை அணியில் அதிகபட்ச ஓட்டங்களாக, ஒசேத பெனார்டோ 102 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நாஷீம் ஷா 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும், ஷாயீன் அப்ரிடி, மொஹமட் அப்பாஸ் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் பாகிஸ்தானின் அபீட் அலி தெரிவு செய்யப்பட்டார்.

5 ஆவது நாள் போட்டி 14 நிடங்கள் இடம்பெற்றது.அதில் 16 பந்துகள் வீசப்பட்டது.3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா தனது 16 வயது 307 நாளில் மிக குறைந்த வயதில் 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் உல் ஹனி 5 விக்கெட்டை குறைந்த வயதில் வீழ்த்தி சாதனை நிலை நாட்டியிருந்தார்.நசீம் உல் ஹனி மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஜோர்ஜ் டவுனில் 16 வயது 302 நாட்களில் இந்த சாதனையை நிலை நாட்டியிருந்தார்.2009 ம் ஆண்டு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது நசீம் ஷாவுக்கு வயது 6. அந்த நேரம் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தடை செய்யபட்டிருந்தது.கடந்த 4 வருட காலமாக பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியமை குறிப்பிடதக்கது.

இரு அணிகளும் மோதிய முதல் போட்டி சீரற்ற கால நிலையால் வெற்றி -தோல்வியின்றி நிறைவுபெற்றது

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இந்த வெற்றிக்காக பாகிஸ்தான் அணி 60 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் 80 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை அணியும் 80 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை