2/3 பெரும்பான்மையை வெல்லும் இலக்கில் நாம் உறுதி

ஐ.தே.கவை ஆதரிக்கும்  சுமந்திரனின் கருத்து ஆபத்தானது

மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பதற்காக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 'ஆவி' மீண்டும் செயற்பட ஆரம்பித்திருப்பது ஆபத்தான நிலைமையாகும் என தகவல் தொலைத்தொடர்பு ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எமது அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை பெற முடியாது போனால் தமது தரப்பு ஐ.தே.கவை ஆதரிக்கும் என சுமந்திரன் எம்.பி கூறியுள்ளதினூடாக கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் கோட்டாபயவை தோற்கடிக்க செயற்பட்டது நிரூபணமாகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற 

விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு பெற்றுக் கொள்வதற்காக ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்க தயார் என சுமந்திரன் எம்.பி கூறியுள்ளார். எமது அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை பெற முடியாது போனால் தமது தரப்பு ஆதரவை ஐ.தே.கவுக்கு அளிப்பதாக அவர் கட்சி தலைமையகத்தில் வைத்து பகிரங்கமாக கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க செயற்பட்டது இதனூடாக நிரூபணமாகிறது.அதனால் தான் தெற்கிலுள்ள மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 52.25 வீத வாக்குகளை அளித்து அவரை வெல்ல வைத்தார்கள். அன்று மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆவி இன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கி அவரை பலப்படுத்துமாறு மக்களிடம் கோருகிறோம். இந்த ஆவிகளை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழ்,முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இதைப்பற்றி நன்றாக சிந்தித்து செயற்பட வேண்டும். எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டால் நாட்டுக் ஏற்றவாறு சட்டங்களை மாற்றவும் அரசியலமைப்பை திருத்தவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எந்த ஒரு அரசாங்க நிறுவனமோ மாகாண சபையோ வெளிநாடொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற வேண்டும். அனுமதியின்றி எந்த ஒப்பந்தம் செய்ய முடியாது என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர விடுத்துள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திட்ட அமுலாக்கல் அமைச்சின் அனுமதியையும் பெற வேண்டும். இது தொடர்பான அளவுகோல்கள் இன்றி எந்த நபருக்கோ நிறுவனத்திற்கோ அமைச்சர்களுக்கோ தமக்கு விரும்பியவாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியாது. அதே போன்றே சட்டமா அதிபரின் ஆலோசனையும் அவசியம் எனவும் சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதற்கு இது மிகவும் முக்கியமான சுற்றுநிருபமாகும்.

சிறுமற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களின் கடன்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இதனூடாக தவறான செய்தி பரவியுள்ளது.அவர்களின் கடன்களை இரத்துச்செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடனை இரத்துச் செய்வதற்காக அன்றி சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்கள் பெற்ற கடனுக்காக அவர்களின் சொத்துக்களை ஏலவிற்பனை செய்வதையும் வங்கியினால் இடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிலகாலத்திற்கு தடுத்து வைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இக் காலப்பகுதியினுள் அவர்ளின் நிதி நிலைமை சீரான பின்னர் வட்டி வீதத்தை குறைத்தோ இரத்து செய்தோ அவர்களின் தொழில்முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்துவதே இந்த சலுகையின் நோக்கமாகும். கடனை முழுமையாக ரத்து செய்வதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு செய்தால் வங்கிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்துவிடும். அவர்களின் சொத்துக்களை ஏலவிற்பனை செய்வதே இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அரச ஊடகளுக்கே அரசாங்க விளம்பரங்களை வழங்க வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனூடாக தனியார் துறைக்கு விளம்பரம் வழங்கக் கூடாது என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரச ஊடகங்களுக்கு கட்டாயமாக விளம்பரங்களை வழங்கி தனியார் துறைக்கும் அவற்றை வழங்க முடியும். செலவிற்கு அமைய தனியார் துறைக்கும் அவற்றை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த , அரச துறை மோசடிகளை மட்டுப்படுத்தி செயற்திறனான அரச ​சேவையை உருவாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை அரசதுறையில் அறிமுகம் செய்ய இருக்கிறோம. குறுகிய காலத்தினுள் அரச துறையை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க யூ.என்.டி.பி விருப்பம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை