புதிய அரசு 2/3 பெரும்பான்மை பெற சு.க அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கட்சி அமைப்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற கட்சியின் மீளாய்வுக் கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை அபிவிருத்தி செய்து வளமான நாடொன்றை கட்டியெழுப்புதவற்காக அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். இதற்கு அமைப்பாளர்கள் முதல் சகல சு.க. வலையமைப்பும் பங்களிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை சு.கவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்ப்பதாக சு.க செயலாளர் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

5 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று முன்தினம் மாலை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கமைய அடுத்த பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட பொதுஜன பெரமுன முன்வரும் என நம்புகிறோம்.

சின்னம் பற்றி பொது இடத்தில் ஆராய்வது உகந்ததல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்கும் கூட்டத்தில் இது பற்றி முடிவு செய்ய முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்காக பங்களித்த அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை பற்றியும் இங்கு ஆராயப்பட்டது. அடுத்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனும் பேசவுள்ளோம். பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது என்றார். (பா)

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை