கல்முனை கல்வி மாவட்டத்தில் 21,000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றல்

பரீட்சைக் கடமைகளில் சுமார் 1,100 அதிகாரிகள்

கல்முனை கல்வி மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சை அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சைக்கு தோற்றியதை அவதானிக்க முடிந்தது.

நேற்று ஆரம்பமான சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கென கல்முனை கல்வி மாவட்டத்திலிருந்து சுமார் 21 ஆயிரம் பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

பாடசாலை பரீட்சாத்திகளாக 6,863 பாடசாலை மாணவர்களும், தனிப்பட்ட பரீட்சாத்திகளாக 14,138 பேரும் தோற்றுகின்றனர். பரீட்சைக் கடமைகளுக்கென சுமார் ஆயிரத்து நூறுபேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனை கல்வி மாவட்டத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை மற்றும் திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 138 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறுகின்றது.

கல்முனை கல்வி மாவட்டத்தில் இம்முறை பதினொரு பரீட்சை இணைப்பு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இதேவேளை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் கல்முனை கல்வி மாவட்டத்தின் பிரதான பிராந்திய பரீட்சை நிலையமாக செயற்பட்டு வருகின்றது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரி ஆகியன பரீட்சை இணைப்பு நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன.

கல்முனை கல்வி வலயத்தில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, உவெஸ்லி உயர் பாடசாலை, மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை ஆகியனவும், சம்மாந்துறை கல்வி வலயத்தில் சம்மாந்துறை மத்திய கல்லூரி, தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலயம் மற்றும் இறக்காமம் அஷ்ரஃப் மத்திய கல்லூரி ஆகியனவும், திருக்கோவில் கல்வி வலயத்தில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியனவும் பரீட்சை இணைப்பு நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக கல்முனை கல்வி வலயத்தில் 56 பரீட்சை நிலையங்களும், சம்மாந்துறை கல்வி வலயத்தில் 35 பரீட்சை நிலையங்களும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 39 பரீட்சை நிலையங்களும், திருக்கோவில் கல்வி வலயத்தில் 08 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டு பரீட்சை சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் அனர்த்த பாதுகாப்பு முன்னாயத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை