2020 ஒக்டோபர் வரை பாரிய கடன் சுமையில்லை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்தகதி

மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

இலங்கைக்கு 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையில் பாரிய கடன் சுமையில்லையென மத்திய வங்கியின் புதிய ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டிற்கான இறுதி நாணயக் கொள்கை சபைக்கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் 2020 இல் இலங்கை அரசாங்கம் மொத்தமாக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தமை, வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்தமை, இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகியன காரணமாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்த கதியை அடைந்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் இங்கு மேலும் விளக்கமளித்ததாவது-

2019 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 2.7 சதவீத மந்தமான வளர்ச்சியை எட்டியுள்ளபோதும் அடுத்த ஆண்டில் இது படிப்படியாக முன்னேற்றம் காணுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி 2020 இல் 4 தொடக்கம் 4.5 சதவீத வளர்ச்சியை இலக்கு வைத்துள்ளபோதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று 6.5 சதவீத வளர்ச்சி நடைமுறை சாத்தியமாகுமா என்பது தொடர்பில் மத்திய வங்கி ஆராயும். இலங்கை அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை படிப்படியாக மீட்சி பெற்றுள்ளபோதும் கடந்த 11 மாத காலப்பகுதியில் இது 19.6 சதவீத வீழ்ச்சியையும் தனியார் பணம் அனுப்பும் செயன்முறை கடந்த 10 மாதங்களில் 5.8 சதவீத வீழ்ச்சியையும் அடைந்துள்ளது.

இவ்வாண்டின் இறுதித் தவணையில் பொருளாதாரம் மிக மந்தமான 2.7 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது. இதற்கு வேளாண்மை மற்றும் பணிகள் துறையில் ஏற்பட்ட குறைந்த வளர்ச்சியே பிரதான காரணமாகியுள்ளது.

தனியார் துறை இறுதித் தவணையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது 2020 இல் படிப்படியாக முன்னேற்றம் காணுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி 2020இல் தனியார்துறையினர் 2020இல் 12 தொடக்கம் 13 சதவீத பங்களிப்பை வழங்குவரென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 2020 இல் பணவீக்கம் 4 சதவீதத்தில் இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை