மஹானாமவுக்கு 20, திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறை

மஹானாம, திஸாநாயக்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை-Mahanama Dissanayake Jail Sentence

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களுக்கு எதிராக மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்  குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதற்கமைய, ஜனாதிபதி பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே. மஹானாமவுக்கு, 13 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள் குழாம், இலஞ்சமாக பெற்ற ரூபா 2 கோடி பணத்தையும் அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிட்டது. அத்துடன் ரூபா 65,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாஸ திஸாநாயக்கவுக்கு 11 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், ரூபா 55,000 அபராதத்தையும் செலுத்துமாறும் உத்தரவிட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதமளவில், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இரும்புகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் ரூபா 54 கோடியை இலஞ்சமாக பெறுவதற்கு முயன்றுள்ளதோடு, அதற்கான முற்பணமாக ரூபா 2 கோடி பணத்தை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைமாற்றிய போது, இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Thu, 12/19/2019 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை