அரசின் வரி, நிவாரண சலுகைகள் 2 வாரங்களில் பயன்

அரசாங்கம் கடந்த முதலாம் திகதி தொடக்கம் வழங்கியுள்ள வரிச் சலுகை மற்றும் நிவாரணங்களினால் கிடைக்கும் பயன்களை எதிர்வரும் இரு வாரங்களில் மக்கள் அனுபவிக்க முடியுமென இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.  

கொழும்பு இறைவரி திணைக்கள தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் வரிச் சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வரி விதிப்புக்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.  வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சில வரிகள் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 27ஆம் திகதி அரசாங்கம் இது தொடர்பில் அறிவித்திருந்தது. இது வரி செலுத்துவோருக்கான சுமையை வெகுவாக குறைத்துள்ளது. வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாதோர் இரு தரப்பினருக்கும் இது பெரும் சலுகையாக அமைந்துள்ளது.  

அரச மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்கள் அரசாங்கத்துக்கு செலுத்தி வந்த பெருமளவு வரி திருத்தம் செய்யப்பட்டதுடன், அவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை மீதமாக்கிக்கொள்வதற்கு முடிந்துள்ளது. அவ்வாறு மீதமாக்கப்பட்டுள்ள நிதி தனிப்பட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள இடமளிக்கும். அத்துடன்  வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுயமாக வரி செலுத்துவதற்கு முன்வருவர். அத்துடன் வர்த்தக சமூகமும் சுயமாக முன்வந்து வரி செலுத்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

இதனைத் தவிர இந்த வரிச் சலுகை மூலம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை சரிசெய்துகொள்வதற்காகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் அத்தியாவசியமற்ற செலவுகளை இல்லாதொழிப்பதற்கும் குறிப்பாக அரசாங்க நிறுவனங்களின் அத்தியாவசியமற்றவற்றை பெற்றுக்கொள்வதை நிறுத்துதல், வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்தல் மூலம் இதனைச் சரிசெய்யலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Fri, 12/06/2019 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை