நாடு முழுவதும் சீரற்ற காலநிலை; 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் 100 மி.மீ.மேல் மழை

2,062 குடும்பங்களைச் சேர்ந்த 7,025 பேர் பாதிப்பு

ஒருவர் மரணம்; 27 வான் கதவுகள் திறப்பு

அடுத்துவரும் சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடருமென அறிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

புத்தளம், குருநாகலை, கொழு ம்பு, களுத்துறை, மாத்தறை, காலி, மொணராகலை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். நேற்று முன்தினம் குருநாகலை மாவட்டத்தில் கல்கமுவ பிரதேசத்தில் 138 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  நாட்டில் விசேடமாக தென் மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும். நாட்டின் ஏனைய பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் மற்றும் காலி மாவட்டத்திலும் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாக கூடும். கடும் மழை காரணமாக மலையக பகுதிகளில் மண் சரிவு அனர்த்தம் ஏற்படக்கூடும். தாழ் நில பகுதிகளில் வெள்ள நிலை, மரங்கள் முறிந்து விழுதல் போன்றன இடம்பெறக்கூடும்.

மலையக பகுதியில் உள்ள மக்கள் விசேடமாக மண் சரிவு அனர்த்தம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மலையக பகுதிகளில் முகில் கூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் இந்த வீதிகளை பயன்படுத்தும் பொழுது அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, மொணராகலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கையையும் விடுத்துள்ளதுடன், களு கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை, மாதுரு ஓயா, கும்புக்கன் ஓயா, மகாவலி கங்கை, யான் ஓயா, மல்வத்து ஓயா, மீ ஓயா, மஹா ஓயா, அத்தனுகல ஓயாவின் நீர்மட்டங்கள் கடும் மழை காரணமாக அதிகரிக்கக் கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் வான் கதவுகளும் திறக்கப்படும் என்பதால் குறித்த நீர்நிலைகளை அண்டிவாழும் மக்கள் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், 816 குடும்பங்களைச் சேர்ந்த 2,780 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

தொடரும் அடை மழை காரணமாக ஹாலிஎல, ஜயகமவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுவதுடன் வீடொன்று மண்சரிவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் இந்த பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. என்றாலும் ஹாலிஎல மெதபிட்டிகம மற்றும் ஹாலிஎல திக்வெல்ல கிராம சேவக பிரிவுகளின் கிராம சேவகர்கள் அதிக மழை பெய்து வருகின்ற போதும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகவில்லையென கூறுயுள்ளனர்.

பதுளையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பதுளை – பசறை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாதையை சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, மொணராகலையில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதால் அனைத்துக் குளங்களும் நிரம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

27 வான் கதவுகள் திறப்பு

அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை, மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட 27 நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் திருமதி.ஜானகீ மிகஸ்தென்ன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்; உறுகாமம் நீர்த்தேக்கம், மாத்தளை வேமெடில்ல நீர்த் தேக்கம், அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவேவ, நுவரவேவ, திஷாவேவ, நாச்சிவிதுவ, மாஹவிலச்சிய, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நுனுகம்வெஹற, மௌவறா, யோதவெவ உட்பட 27 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே போன்று கடும் மழை காரணமாக தற்பொழுது குருணாகல் மாவட்டத்தில் எஹேட்டுவௌ, கல்கமுவ, பொல்பித்திகம, மஹவ ஆகிய குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை