சுனாமி 15 வருட பூர்த்தி; 2 நிமிட மௌன அஞ்சலி

சுனாமி 15 வருட பூர்த்தி; 2 நிமிட மௌன அஞ்சலி

தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஷ்டிப்பு

இலங்கையில் சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு இன்று 26ஆம் திகதியுடன் 15 வருடம் பூர்த்தியடைகின்றது.

இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு நினைவு தின நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

2004ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய சுனாமி அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களை நினைவு கூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் சகல அரச திணைக்களங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை இரண்டு நிமிடநேர மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.  

தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் பாதுகாப்புப் படையினர்,பொலிஸார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.  

இது தவிர நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் மாவட்ட மட்டத்திலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகங்களிலூடாக இன்றையதினம் நினைவுதின நிகழ்வுகள் மற்றும் சமய அனுஷ்டானங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் மாவட்ட செயலாளர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்தார். 

2004 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 26ஆம் திகதிகாலை சுமார் 8 மணியளவில் முதலாவது சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கியது. இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் சுனாமி பேரலை உருவாகியதுடன் அது இலங்கையையும் தாக்கியது.

இந்த சுனாமி பேரலை தாக்கத்தினால் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் பல மில்லியன் கணக்கான சொத்துக்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

Thu, 12/26/2019 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை