1300 மெ.தொன் நெல் அரிசியாக்கி விநியோகம்

மட்டு. அரச அதிபர் அதிரடி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகா போகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கும் நெல்லை நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய விரைவாக அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற விசேட கூட்டத்தில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு அமைய களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக அரிசி ஆலைகளினூடாக பொது ஒப்பந்த அடிப்படையில் உயர்தரத்தில் அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய இந்நடவடிக்கை அமுல் படுத்தப்படவுள்ளது.

இதன்படி அம்மாவட்டத்தில் களஞ்சியபடுத்தப்பட்டிருந்த சுமார் 1300 மெற்றிக்தொன் நெல்லை அரிசியாக்குவதற்காக தகுதிவாய்ந்த அரிசியாலைகளுக்கு வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், பிரதம கணக்காளர் கே.​ஜெகதீஸ்வரன் ,மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் நெல் சந்தைப்படுத்தும் சபைகளின் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட தகுதியான அரிசிஆலை உரிமையாளர்கள் என பலரும் சமுகமளித்திருந்தனர்.

இம்மாவட்டத்தில் புலிபாய்ந்தகல், மணல்பிட்டி, முள்ளாமுனை, கரடியனாறு, கோயில்போரதீவு, அரசடிதீவு, கஜவத்தை, களுவாஞ்சிகுடி ஆகிய 8 களஞ்சியசாலைகளில் நெல்சந்தைபடுத்தல் சபை கொள்வனவு செய்திருந்த நெல்லையே அரிசியாக்கி சதோச நிறுவனத்திற்கு ஒப்படைக்கபடவுள்ளது.

பொறுப்பேற்கும் தனியார் அரிசியாலை உரிமையாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் எனவும், அதிகாரிகள் தமது மேற்பார்வை கடமைகளை அமுல் படுத்த வேண்டும் எனவும், அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்.

 

பெரியபோரதீவு தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Thu, 12/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக