‘ தினமின’ பத்திரிகைக்கு 110 வயது

இலங்கையின் மிகப் பழைமை வாய்ந்த தேசிய நாளிதழும் எமது சகோதர பத்திரிகையுமான ‘தினமின’ நாளை அதன் 110 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறது.

இப்பத்திரிகையின் முதலாவது இதழ் 1909ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி புறக்கோட்டையில் இருந்த லங்கா பினாவ விஸ்ரத்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அந்த அச்சகத்தின் சொந்தக்காரராக இருந்தவர் காலஞ்சென்ற ரொபர்ட் பட்டுவத்துடாவ. தினமின பத்திரிகையின் ஆரம்ப இதழ் 19 1/2x13 அங்குலம் என்ற அளவில் இருந்தது.

இப்பத்திரிகைக்கு தினமின என்ற பெயரையும் அது அச்சடிக்கப்படவேண்டிய சுப நேரத்தையும் பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாவின் தலைமை தேரரான வண. ரத்மலான தர்மராம தேரர் கணித்துக்கொடுத்தார்.

‘தினமின’ பத்திரிகையின் ஸ்தாபக உரிமையாளரும் ஆசிரியருமான எச். எஸ்.பெரேரா சுகவீனமுற்ற நிலையில் பத்திரிகை விலைக்கு வாங்கிய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான மறைந்த டி. ஆர். வி​ேஜவர்தன பத்திரிகை தொடர்ந்து வெளியிடப்படுவதற்கு பெரிதும் உதவினார்.

தனது 110 வருட நீண்டகால பயணத்தில் ஏனைய அனைத்து செய்திப் பத்திரிகைகளையும் பின்தள்ளி நாட்டு மக்களுக்கு சமூக, பொருளாதார கலா சார மற்றும் அரசியல் விழிப்புணர்வை வழங்குவதில் தினமின முன்னோடியாக இருந்துள்ளது.

தினமின பத்திரிகையின் 110 ஆவது நிறைவை ஞாபகப்படுத்தும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி தினமின பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது. அதனையடுத்து அடுத்த நாளான எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள சம்புத்தாலோக்க விகாரையில் போதி பூஜையும் இடம்பெறவுள்ளது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை