தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஹெலிகொப்டர் சவாரி

தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மாணவர்களை கௌரவிக்கும் ஹெலிகொப்டர் சவாரி நேற்றுமுன்தினம் (21) சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர்,ஏ.எம்.ஜாஹிரின் ஏற்பாட்டில் மக்கள் ஐக்கிய முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும் பிரபல தொழிலதிபரும் சகுறா ஏவியேஷன் அதிபதியுமான றுஷான் மலிந்த பெர்ணான்டோவின் அனுசரணையில் இடம்பெற்ற இச் சவாரிநிகழ்வில் பங்கு கொள்ள சுமார் 300 மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனை கண்டுகளிப்பதற்காக நூற்றுக் கணக்கான பொதுமக்கள் இங்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பல சுற்று சவாரி நடைபெற்றது. ஆனால் காலநிலை மாற்றமடைந்து மழை இடையூறு ஏற்படுத்தியதால் பலநூறு மாணவர்களை சவாரி செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்வை இடைநிறுத்த நேரிட்டது.

றுஷான் மலிந்த பெர்ணான்டோ ஜப்பானில் கல்வி பயின்றுள்ளதுடன் விமானி பயிற்சி நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார். "இலங்கையில் 2030 ஆண்டளவில் விமானிகளுக்கான தேவை அதிகரிக்கவுள்ளதால் இளம் தலைமுறையினரிடத்தில் விமானி தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக" அவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பல்வேறு சமூக நற்பணி சேவைகளையும் இவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை