பாதுகாப்பு அமைச்சின் 'MOD Alerts' குறுந் தகவல் சேவை ஆரம்பம்

மும்மொழிகளிலும் தகவல் கிடைக்கும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில் மும்மொழிகளிலான புதிய குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) சேவையை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எம்.ஓடி எலேட்ஸ்” (MOD Alerts) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப் புதிய குறுந்தகவல் (எஸ். எம். எஸ்) சேவையை பாதுகாப்புச் செயலாளரும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருமான ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொடை பாதுகாப்பு அமைச்சில்

நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் தற்கால தேவையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு, இலங்கை

 

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு மற்றும் ஒத்துழைப்பின் வெளிப்பாடாகவே இச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி புதிய எஸ். எம். எஸ் சேவையானது தேசிய புலனாய்வுத்துறை பிரதானி அலுவலகத்தின் ஆலோசனைகளுக்கமைய பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஊடாக முன்னெடுத்து செல்லப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட தகவல்கள், அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்தங்கள் தொடர்பான நம்பகத் தன்மையைக் கொண்ட, உறுதிப்படுத்தப்பட்ட உண்மைத் தகவல்களை நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கையடக்கத் தொலைப்பேசி ஊடாக உடனுக்குடன் அறியத்தருவதே இந்த “எம்.ஓ.டி எலேட்ஸ்” சேவையின நோக்கமாகும்.

தவறான முறையில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத, உண்மைக்கு புறம்பான செய்திகள் மற்றும் பொய் வதந்திகளினால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் அநாவசிய பீதி மற்றும் பதற்றத்தை தவிர்த்து உறுதிப்படுத்தப்பட்ட சரியான தகவல்களை வெளிப்படுத்த இந்த சேவை பயனுள்ளதாக அமையவுள்ளது.

இந்த எஸ். எம். எஸ். சேவையானது பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் மீள அறிமுகப்படுத்தப்பட்ட www.defence.lk என்ற உத்தியோகபூர்வ வலைதளத்தின் மற்றுமொரு சேவையாக காணப்படுகிறது.

ஸாதிக் ஷிஹான்

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை