ஐ.எஸ் பற்றிய ரகசியங்களை வெளியிட்ட பக்தாதி மனைவி

மரணித்த இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் மனைவி மூலம் அந்த ஜிஹாத் குழுவின் உள் செயற்பாடுகளை தெரிந்துகொள்ள முடிந்ததாக துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிடுள்ளார்.

ரானியா மஹ்மூத் என்று அடையாளம் காணப்படும் பக்தாதியின் மனையி கடந்த ஆண்டு துருக்கியிடம் சிக்கியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிரடிப் படை கடந்த மாதம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பக்தாதி தற்கொலை செய்து கொண்டார். ரானியா மஹ்மூத் அவரின் முதலாவது மனைவி ஆவார்.

சிரிய எல்லைக்கு அருகில் உள்ள ஹதாயா மாகாணத்தில் 2018 ஜுன் 2 ஆம் திகதி இந்தப் பெண் கைது செய்யப்பட்டதோடு அதன்போது லெய்லா ஜபீர் என்ற பக்தாதியின் மகள் உட்பட மேலும் 10 பேர் துருக்கியிடம் சிக்கியுள்ளனர்.

ஈராக்கிய அதிகாரிகள் தந்த டி.என்.ஏ மாதிரி கொண்டு இந்த குடும்பத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

“(மனைவியின்) உண்மையான அடையாளத்தை நாம் விரைவாக உறுதி செய்தோம். அந்த நேரம் அவர் தானாக முன்வந்து பக்தாதி மற்றும் ஐ.எஸ் குழுவின் உள் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை தந்தார்” என்ற அந்த அதிகாரி கூறினார்.

“எமக்கு ஏற்கனவே தெரிந்த பல விடயங்களை இதன் மூலம் எம்மால் உறுதி செய்ய முடிந்தது. பல முக்கியமான கைதுகளை மேற்கொள்வதற்கு இந்த தகவல்கள் எமக்கு உதவின” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பக்தாதியின் மனைவி கைது செய்யப்பட்டது குறித்து கடந்த புதன்கிழமை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தகவல் வெளியிட்டிருந்தார். “அவரின் மனைவியை கைது செய்தோம். இதனை நான் முதல் முறை வெளிப்படுத்துகிறேன். ஆனால் நாம் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை” என்று அங்காராவில் மாணவர் கூட்டம் ஒன்றில் எர்துவான் குறிப்பிட்டார்.

பக்தாதியின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை கைது செய்ததை துருக்கி இரு தினங்களுக்கு முன் உறுதி செய்தது.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை