அதியுச்ச அதிகார பகிர்வு தீர்வை நாம் பெறுவோம்

சஜித் பிரேமதாச  துவேஷமில்லாதவர்

நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களது கடந்தகால அனுபவங்களை சிந்தித்து, ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதி உச்ச அதிகாரப் பகிர்வுடன், எமது மக்கள் கௌரவத்துடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வை பெறுவோம்.

கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையினால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து 98 வீதமான வாக்குகளை அளித்து எமக்கு ஆதரவு

வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் ரவிராஜின் 13வது நினைவு தினம் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதான போட்டி முக்கியமாக இரண்டு வேட்பாளர்களுகிடையில் நடைபெறுகின்றது. சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் வெற்றி பெறுவார். ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்கு பெற்றுவதா இல்லையா என்பது முதல் கேள்வி.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. பங்குபற்றாத காரணத்தினால் தான் மகிந்த தெரிவு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சியின் கீழ் 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றிக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு தெரியும். அந்தத் தேர்தலில் நாங்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால், அன்று வாக்களித்திருந்தால், அந்த நிலமை ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர் யாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அந்தப் பங்களிப்பு எமக்கு சாதகமான முடிவாக எம்மைப் பொறுத்தவரையில் ஏற்பட்டிருக்கும். பாதகமான ஒரு முடிவைத் தவிர்ப்பதற்கும், நாங்கள் பங்களிப்பைச் செய்ய முடியுமாக இருந்தால், அந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் நினைக்கின்றோம்.

சஜித் பிரேமதாசவை துவேசவாதியாக நான் கருதவில்லை. அவரை நீண்டகாலமாக தெரியும். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, அனைத்து மக்களும், சமத்துவமாக வாழ வேண்டுமென்ற கருத்தை கூறியுள்ளதுடன், இதுவே எனது திடமான நிலைப்பாடு என கூறியிருக்கின்றார். அதி உச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென கூறியிருக்கின்றார்.

கோட்டா வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை. நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துக்கொள்ளுங்கள். இனியும் செய்யமாட்டோம் என கூறவில்லை.

நடந்தது நடந்துவிட்டது. நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள் ஒன்றாக பயணிப்போம் என சொல்கின்றார்கள். எங்கு கூட்டிச் செல்லப் போகின்றார்களோ தெரியவில்லை என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை