சஜித் ஜனாதிபதியானதும் பொத்துவில் பிரதேசப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

பொத்துவிலில் வாழும் மக்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள வைத்தியசாலையை மத்திய அரசுக்கு கீழ் கொண்டு வந்து ஒரு தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிடம் மிகவும் வழுவாக முன்வைத்துள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இங்கு தனியானதொரு வலயக் கல்வி முறைமையொன்று அமைக்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கிருந்த முன்னாள் ஆளுநர் காலத்தில் இந்த விவகாரம் தீர்வு காணப்பட்ட போதிலும் கூட, கல்வி அமைச்சினூடாக அனைத்து வலயங்களையும் ஒன்றாக உள்ளடக்கியதாக வர்த்தமானியில் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் மிக அவசரமாக இடம்பெற வேண்டும் என்பதையும் அவரிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றோம்.

மேலும் இப்பிரதேச மக்களது நீண்ட கால தேவையாக இருந்த ஹேட ஓயா நீர்த் தேக்கமும் அதனூடாக இருக்கின்ற நீர்ப்பாசனத் திட்டத்தின் விளைவாக எமக்கு கிடைக்கின்ற குடிநீர் வழங்கள் திட்டத்தையும் அமுல்படுத்துவதற்காக கடந்த பல வருடங்களாக முயற்சித்து எனது அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட விசேட செயலணி மூலம் நானும், அமைச்சர் தயாகமகேயும், மொனராகலை மாவட்ட அமைச்சர்களும், பிரதி சபாநாயக்கர் உட்பட அமைச்சரவை குழுவினூடாக இவ்விடயத்திலுள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன், புதிய ஜனாதிபதி சஜித் பிரேமதாசவின் கீழ் இவ்விடயம் மேலும் இழுத்தடிக்கப்படாமல் மிக விரைவாக ஹேட ஓயா நீர்ப்பாசன மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவரிடத்தில் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இங்குள்ள அடுத்த பிரச்சினையாக காணிப் பிரச்சினை காணப்படுகின்றது. லஹுகல, பானம, பொத்துவில் பிரதேசத்திற்குள் வருகின்ற விவசாய காணிகள் வன பரிபாலன திணைக்களம், வன விலங்கு திணைக்களம் மற்றும் தொல் பொருள் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மூலம் கையாளப்பட்டு வருவதால் இந்த நிலங்களை விடுவித்துத் தர வேண்டும். தாரம்பல்லை, வேகாமம், பள்ளியடிவட்டை, கிரான் கோவை மற்றும் கிரான் கோமாரி ஆகிய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர வேண்டும். நீண்ட காலமாக ஒரு பிச்சைக்காரனின் புண் போல இனியும் தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பில் பேசிக்கொண்டடே இருக்க இயலாது. அவருடைய ஆட்சியின் முற்காலத்தில் இப்பிரச்சினைகளுக்கான சாதகமான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்திக்கொள்கின்றேன்.

அவருடைய மேற்பார்வைக்கு கீழ் இருக்கின்ற தொல் பொருள் திணைக்களத்தின் மூலம் இங்குள்ள விகாரை சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் யாருக்கும் பாதகமில்லாமல் சுமூக தீர்வை காண வேண்டும்.

இப்பிரதேசத்தை சுற்றுலாத்துறையின் ஒரு மையமாக மெரூகூட்டி அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி, இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் முன்னேற்றி, மீனவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என அவரிடம் மிகவும் வினயமாக வேண்டியிருக்கின்றேன்.

அவருடைய வெற்றிக்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். எங்களுடைய உரிமைகளுக்கான போராட்டத்தின் முக்கியதொரு கட்டத்தை அடைந்திருக்கின்றோம். அவற்றை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு அவரது ஆட்சி காலத்தில் நிச்சயமாக எமக்கு கிட்டும் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்விற்கு அமைச்சர்களான ரிசாட் பதியூதீன், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் பைசால் காஸிம், பாராளுமன்ற உறுப்பினர் நஸீர், பிரதேச சபையின் தவிசாளர் வாசித்உட்பட பொத்துவில், லவுகல, பானகம வாழ் பிரதேசங்களில் வாழும் மக்களும் கலந்துகொண்டனர்.

Sun, 11/10/2019 - 16:02


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக