அக்குறணை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்: இருவர் மரணம்

298 டெங்கு  நோயாளர்கள்  இனம்காணப்பட்டுள்ளனர்

டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவற்கு மக்கள், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் அக்குறணை பிரதேச சுகாதார துறை அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் பிரதேச மக்களின் ஒத்துழைப்பிலேயே நுளம்பு பெருவதை தடுக்க முடியுமெனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார்.அக்குறணை பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து நேற்று (20) டெங்கு நுளம்பு பெருக்கம் குறித்து கருத்து வெளியிடுகையிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

அக்குறணை பிரதேசத்தில் இதுவரையில் 298 ற்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர் என்பதுடன் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அளவதுகொடை, புளுகொஹதென்னை, கசாவத்தை, நீரெல்லை, வராகஸ்கின்ன, தெளும்புகஹவத்தை, ரம்புக்கெல, கொன்கனகள, தெல்கஸ்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

அக்குறணை பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் ஒவ்வொருவரும் தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன், தமது அயல் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் மாத்திரம் பொறுப்புடன் செயற்பட்டால் போதாது, அது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பொறுப்பாக கருதி செயற்பட வேண்டும். அதற்கான வழிகாட்டல்களை சுகாதார துறை அதிகாரிகள், உள்ளூராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள்.

அக்குறணை பிரதேச சபையில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்பத்துவதற்கு அக்குறணை பிரதேச சபை, பிரதேச சுகாதார காரியாலயத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

பூஜாபிட்டி தினகரன் நிருபர்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை