வரலாறு காணாத மழை: வெனிஸ் நகர் மூழ்கியது

இத்தாலியின் வெனிஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை வீழ்ச்சியால் அந்த நகரம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வீதிகள் எங்கு வெள்ளம் நிரம்பி இருக்கும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருப்பதோடு கடும் காற்றும் வீசி வருகிறது.

வெனிஸ் நகரத்தில் தொடர்ந்து பொழியும் பலத்த மழையால் கடந்த செவ்வாயன்று இரவு 10:50 மணியளவில் வெள்ள அளவு 187 செ.மீ. உயிர்ந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.

இது 50 ஆண்டுகளுக்கு பின்னர் நகரத்தை தாக்கிய பெரிய வெள்ளமாகும். கடந்த 1966ஆம் ஆண்டு 194 செ.மீ. உயரம் வரை வெள்ளம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்புமிக்க பெசிலிக்கா தேவாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டுமின்றி பல சுற்றுலா தலங்கள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெனிஸ் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டதாக அந்நகரத்தின் மேயர் லுயிகி ப்ருக்னாரோ அறிவித்துள்ள நிலையில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நகரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அரசாங்கம் உடனடி உதவியளிக்க வேண்டும். செலவு அதிகமாக இருக்கும். இது காலநிலை மாற்றத்தின் விளைவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம்பியுள்ள வெனிஸ் நகரில் உள்்ள கலைப்படைப்புக்கள் அனைத்தும் இந்த மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவை அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்வது இயலாத காரியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிஸ் மட்டுமின்றி இத்தாலியின் பல பகுதிகளில் பல அடிகளுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு படகு மூலம் போக்குவரத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலியின் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. வரலாறு காணாத இந்த மழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை