இன முரண்பாடுகளை தூண்டுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்ைக

முல்லைத்தீவில் சஜித்

கொடிய யுத்தத்தில் தந்தையை இழந்த எனக்கு தமிழ் மக்களின் கவலை புரிகிறது

பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒற்றுமையான நாட்டை உருவாக்குவேன்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர்களுக்கு எதிராக தான் ஜனாதிபதியானதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் ​போவதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று முல்லைத்தீவில் தெரிவித்தார். 30 வருடகால கொடிய யுத்தத்தில் நான் எனது தந்தையை இழந்ததைப் போன்று இங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் உங்களிலும்

ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் இந்த யுத்தத்தின் மூலம் இழந்திருபீர்கள் என்று குறிப்பிட்ட அவர் அதன் கவலை தனக்குப் புரிவதாகவும் சுட்டிக்காட்டினார். பிரிபடாத இலங்கைக்குள் சிறந்த ஒற்றுமை மிக்க சூழலை உருவாக்கி சுதந்திரமாக இந்நாட்டில் ஒருகுடையின் கீழ் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மேடையில் தோன்றி அவருக்கு ஆதரவு வழங்கினர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று, வெலிஓய ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் இங்குள்ள மக்களுக்கு அறிவிப்பதற்காகவே நான் இன்று இங்கு வந்தேன்.

எமது அரசாங்கம் இம் மாவட்டத்திலுள்ள நீர் விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்தி விவசாயத்தை மேம்படுத்தும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும்.

பெண்களை மையப்படுத்திய குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை மேலும் அபிவிருத்தி செய்யும்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித பாரிய அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை.இதனால் வடக்கு மற்றும் கிழக்கிற்கென தனித்தனி ஜனாதிபதி செயலணிகளை நிறுவி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை கட்டியெழுப்புவோம்.

நான் ஜனாதிபதியானதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பேன். விவசாயத்தை மேலோங்கச் செய்வேன். விவசாய உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்நாட்டை நான் உருவாக்குவேன். தேயிலை,

தென்னை, இறப்பர், நெல், காய்கறிகள் மற்றும் பழங்களென அனைத்து விவசாய செயற்பாடுகளுக்கும் இலவசமாக உரம் வழங்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் இருக்கும்.

எனது தந்தையே பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடையையும் மதிய போசனத்தையும் வழங்கினார். எனினும் அடுத்த அரசாங்கம் வந்து இச் செயன்முறையை நிறுத்தி விட்டது. நான் அதனை மீண்டும் அமுல்படுத்துவேன். அனைத்து மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதை கட்டாயமாக்கி இந்நாட்டில் ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்குவேன். ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு சீருடைகள், பாதணிகள் மற்றும் மதிய போசனத்தை வழங்குவேன்.

சமுர்த்தி வேலைத்திட்டத்தை பலப்படுத்துவேன். அதற்காக ஒதுக்கும் நிதியின் அளவை அதிகரிக்கும் அதேநேரம் நாட்டிலிருந்து வறுமையை முற்றாக ஒழிப்பேன். எனது தந்தை உருவாக்கிய 'ஜனசவிய' வேலைத்திட்டம் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை முற்றாக நாட்டிலிருந்து நீக்குவேன்.

அனைத்து பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்வி நிலையம் மற்றும் தொழில்நுட்ப மையமொன்றை ஸ்தாபிப்பேன். அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொழில்நுட்ப கல்வி நிலையங்களும் மையங்களும் ஆரம்பிக்கப்படும்.

இதன்மூலம் அறிவான இளைஞர் சமுதாயம் ஒன்றை நான் உருவாக்குவேன்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு கைத்தொழில் பேட்டைகளை நான் உருவாக்குவேன்.

எனது விஞ்ஞாபனத்தை நன்றாக வாசியுங்கள். அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் எதிர்வரும் 16 ஆம் திகதி நான் ஜனாதிபதியாக வந்து நிறைவேற்றுவேன்.

விசேட தேவையுடையவர்களுக்கு காணி மற்றும் வீடுகளை பெற்றுத் தருவேன். 2025 ஆகும்போது இந்நாட்டில் அனைவருக்கும் வீடு இருக்கும். கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த சாபத்தினால் நான் எனது தந்தையை இழந்தேன். என்னைப்போல தமது உறவினர்களை இழந்த இலட்சக்கணக்கான மக்களின் வலியை என்னால் உணரமுடியும்.

இனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் நாட்டில் பயங்கரவாதம், அடிப்படைவாதம், இனவாதம் என்பன தலைதூக்க நான் இடமளிக்கமாட்டேன்.

இது ஒரு நாடு நாம் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும்.என்னிடம் இரகசிய ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் இல்லை.

அனைத்து மக்களையும் ஒருதாய் மக்களாக பார்க்கும் யுகம் தோன்ற வேண்டுமாயின் எதிர்வரும் தேர்தலில் என்னுடன் கைகோர்த்து அன்னம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாங்குளம் குறூப், முல்லைத்தீவு நிருபர்கள்

Tue, 11/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக