வடக்கு, கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. அதேநேரம் புலம்பெயர்

நாடுகளிலும், தமிழகத்திலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் அனுஷ்டிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர்களின் துயிலுமில்லங்களில், அதேபோன்று புலம்பெயர் தேசங்களில் அமைக்கப்பட்ட நினைவிடங்களில் நேற்று மாலை 6.05 மணிக்கு பிரதான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஏனையவர்கள் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

நாட்டில் ஆட்சி மாற்றும் ஏற்பட்டுள்ள நிலையில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு தடை ஏற்படுத்தப்படும் என மக்கள் அச்சமடைந்திருந்த நிலையில் எதுவிதமான அச்சுறுத்தல்களும் இன்றி தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

குறிப்பாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு எழுச்சி கோலம் பூண்டிருந்த நிலையில் மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்ப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்படி கிளிநொச்சியில் கனகபுரம், தெராவில், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களிலும் மன்னாரில் பண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லங்களிலும், முல்லைத்தீவு அளம்பில், முள்ளியவளை, களிக்காடு, முள்ளிவாய்க்கால், இரணைப்பாலை,தேராவில், வன்னிவிளாங்குளம், தேவிபுரம், இரட்டைவாய்க்கால், ஆலங்குளம், முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினொரு துயிலும் இல்லங்களிலும் யாழ்ப்பாணம் கோப்பாய், கொடிகாமம், திரூவில், பருத்தித்துறை, சாட்டி மற்றும் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மாவடிமுன்மாதிரி, கண்டலடி, தரவை மற்றும் வாகரை ஆகிய துயிலும் இல்லங்களிலும் கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய இடங்களில் ஆலயங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

தடைகளை தாண்டி பல்கலை மாணவர் அஞ்சலி

மாவீரர்களை நினைவு கூருவதற்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பல்கலைகழக பொறுப்பு வாய்ந்த அதிகாரி மாணவர்கள் உள்நுழைவதற்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் தடையுத்தரவையும் மீறி பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வாயிலை வலுக்கட்டாயமாக திறந்தவாறு வளாகத்துக்குள் நுழைந்ததுடன் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபியில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வு காலை 10.15 மணிக்கு இடம்பெற்றது.

மாவீரர்களின் பெயர் கல்வெட்டு அமைப்பு

அதேபோன்று யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் தீலிபனது நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இப் பெயர் பதாதைகள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இதுவரை விடுவிக்கப்படாத மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பாகவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்படி கோப்பாய், கொடிகாமம் மற்றும் எல்லங்குளம் ஆகிய இடங்களில் இவ்வாறு அஞ்சலி நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

புலம்பெயர் நாடுகள் மற்றும் தமிழகத்திலும் அஞ்சலி

உலகம் முழுவதும் தமிழ் மக்கள் செறிந்து வாழக்கூடிய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழகத்திலும் மாவீரர்களிற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நமது வடக்கு, கிழக்கு நிருபர்கள்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை