நன்னீர் மீன் வளர்ப்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சரவை பத்திரம்

நன்னீர் மீன் வளர்ப்பு, நண்டு, இறால் மற்றும் கடலட்டை உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதற்கான பயிற்சிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  மீன்பிடி நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நெக்டா நிறுவனத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. மீன்பிடி நீரியல் வள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்ரரத்ன உட்பட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது நிறுவனத்தில் மேற்கொள்ளவேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டதுடன் அது தொடர்பில் அமைச்சர் தமது அவதானத்தை செலுத்தியுள்ளார்.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் உள்ள நன்னீர் மீன் பிடி செயற்பாடுகள் மற்றும் மத்திய நிலையங்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நன்னீர் மீன் உற்பத்தியை விஸ்தரித்தல் அத்துடன் நண்டு, இறால், கடலட்டை போன்றவற்றை அபிவிருத்தி செய்தல் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு பயிற்சிகளை அளித்தல் தெடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கிணங்க தற்போது மேற்படி நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற் திட்டங்களை துரிதப்படுத்தல் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சரவை பத்திரமொன்றை விரைவாக தயாரித்து தமக்கு கையளிக்குமாறு பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர்கள் அசோகா, ஹேரத் ஆகியோர் உட்பட அமைச்சரின் பிரத்தியேக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை