கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறி

எந்த அரசாங்கங்கள் வந்தாலும் சந்தர்ப்பவாத அரசியலை மாற்றுச் சமூக அரசியல்வாதிகள் பயன்படுத்தியதால் இன்று கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவினை ஆதரிக்கும் பிரசாரக்கூட்டம், காரைதீவு பிரதேச அமைப்பாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்றுமுன்தினம் (11) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலையை விட 75 சதவீதம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மட்டக்களப்பில் எமது மக்களின் இருப்புக்காக கடந்த நான்கு வருட காலத்தில் 42 க்கு மேற்பட்ட மக்கள் போராட்டங்களை வீதியில் இறங்கி தெருநாய்கள் போல் போராடியிருக்கின்றோம்.

சிலவற்றில் வெற்றி கண்டாலும் சில போராட்டங்களில் எம்மால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் மற்றைய அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எமது போராட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்னும் கிழக்கில் அரசியல் அதிகாரம் இழந்த ஒரு சமூகமாக இருக்கின்ற ஒரேயொரு சமூகம் எமது சமூகம்தான்.

அக்கரைப்பற்று பிரதேச சபையை ஒரு இரவுக்குள் நகர சபையாக அல்லாது மாநகர சபையாக மாற்ற முடியுமானால் ஏன் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியவில்லை.

கடந்த மூன்றரை வருடம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கூட 85 சதவீதமான தமிழர்கள் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்தில் ஒரு அரசாங்க அதிபரைக் கூட நியமித்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஒரு கணக்காளரை அரச அதிபரை ஒரு பாடசாலையை தரமுயர்த்த முடியாதவர்கள், தமிழ் மக்களின் கட்சியில் தலைவராக இருப்பதில் பிரயோசனமில்லை. 75 சதவீதம் தமிழர்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு தேசிய பாடசாலைகளும் மற்றைய சமூகம் ஏழு தேசிய பாடசாலைகளுடன் கல்வியினை மேம்படுத்துகின்ற நிலையும் காணப்படுகின்றது.

முஸ்லிம் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் தாங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய, அடையக்கூடிய அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் வைத்திருக்கிறார்கள். இத்தனை பேரும் கிழக்கில் ஒன்றாக கூடி சஜித் பிரேமதாசவுக்கு சார்பாக ஆதரவாக இருக்கின்றார்கள்.

இன்று அம்பாறையில், திருகோணமலையில், மட்டக்களப்பில் இருப்புக்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேளை அன்னப்பறவை வெற்றி பெற்றால் ஐம்பது வருஷம் கிழக்கிலே தமிழர்கள் நினைத்ததை அடையமுடியாத சூழ்நிலைக்கு பின்தள்ளப்படுவார்கள்.

வடக்கின் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு. இன்று சகல வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம் என்றார்.

 மண்டூர் குறூப் நிருபர் )

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை