அமெரிக்கா எண்ணெய் திருடுவதாக சிரிய ஜனாதிபதி அசாத் குற்றசாட்டு

அமெரிக்க துருப்புகள் சிரியாவில் நிலைகொண்டிருக்கும் நிலையில், சிரியாவின் எண்ணெய் வருவாயில் இருந்து மாதம் தோறும் மில்லியன் கணக்கான டொலர் அமெரிக்காவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது நாட்டிலிருந்து அமெரிக்கா எண்ணெய் திருடுவதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி அசாத்தின் மிகப் பெரிய ஆதரவு நாடான ரஷ்யா அமெரிக்காவின் இந்த செயலை “சர்வதேச கொள்ளை” என்று விவரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் சிரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.

ஆனால், எண்ணெய் உற்பத்தியின் முக்கிய பயனாளிகளாக இருக்கும் குர்திஷ்களின் படைகளோடு சேர்ந்து, இந்தப் பகுதியிலுள்ள எண்ணெய் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு சுமார் 500 படையினரை அங்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க துருப்புகள் பாதுகாத்து கொண்டிருக்கும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அமெரிக்கா பயன்பெற வேண்டுமென எதிர்பார்ப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தோடு ஒப்பிடுகையில் சிரியாவிலுள்ள எண்ணெய் வளம் சிறிய அளவாக இருந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைதான் சிரிய அரசுக்கு வருவாய் வழங்கக்கூடிய முக்கிய துறையாகும்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை