ஆர்ச்சர் மீது இனவெறி பேச்சு: மன்னிப்பு கேட்டார் வில்லியம்சன்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 3&2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ச்சர் துடுப்பெடுத்தாடி விட்டு பெவிலியன் திரும்பிய போது இனவெறி சர்ச்சையை சந்தித்துள்ளார். மேற்கிந்தியதீவை பூர்வீகமாக கொண்ட அவருக்கு எதிராக ரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.

இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து தலைவர் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள்.

எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.

நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் இது தொடர்பாக கூறியதாவது:-

ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய ரசிகரை கண்டுபிடிக்க பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி. கமரா மூலம் அந்த ரசிகரை கண்டுபிடித்து விடுவோம். அவரை இனிமேல் மைதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.

ஹமில்டனில் எதிர்வரும் 29-ம் திகதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை