சகல மக்களின் ஜனாதிபதியாக பேதமின்றி செயற்படுவேன்

வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்

எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டுமன்றி சகல நாட்டு மக்களினதும் ஜனாதிபதியாக இன, மத பேதமின்றி செயற்படப் போவதாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் தனது ஆட்சிக் காலத்தினுள் நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

என்மீது நம்பிக்கை வைத்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் நிறைவேற்றுவேன்.

அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு பங்களித்த தேர்தல் ஆணைக்குழுவிற்கும் முப்படையினர், பொலிஸார் அடங்கலான சகல தரப்பினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் நான் மக்களுக்கு முன்வைத்த கொள்கைப் பிரகடனத்திலுள்ள சகல அம்சங்களையும் எனது பதவிக்காலத்தினுள் நிறைவேற்றுவேன். ஆணைக்குழுத் தலைவர் நினைவூட்டியது போன்று காலதாமதமான

 

தேர்தல்களை உரிய காலத்திற்குள் நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். அமைதியான தேர்தலை நடத்தவும் தேர்தல் கலாசாரத்தை மாற்றவும் முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். எனது தேர்தல் பிரசாரங்களின் போது நான் எவரையும் விமர்சிக்காததோடு போஸ்டர், பிளாஸ்டிக் அற்ற பிரசாரத்தையே முன்னெடுத்தேன். என்னுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஆலோசனை வழங்கினேன்.

எனக்கு வாக்களித்தவர்களது ஜனாதிபதியாக மட்டுமன்றி எதிராக வாக்களித்தவர்கள் உட்பட சகல மக்களினதும் ஜனாதிபதியாக நான் செயற்படுவேன். இனம், மதம் பாராது இலங்கையராக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன். என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகிறேன். அமைதி நிலையை பேண ஒத்துழைக்குமாறு சகல தரப்பினரிடமும் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை