நல்லாட்சி அரசு அபிவிருத்தி திட்டங்களை முடக்கி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ

நீங்கள் எதிர்பார்த்தது போன்று நல்லாட்சி அரசு எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை. மாறாக எங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முடக்கி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட போரதீவு மற்றும் மகிழூரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினை ஆதரிக்கும் பிரசாரக்கூட்டம், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணம் எவ்வாறு துரித அபிவிருத்தி கண்டதோ அதே போன்று எங்களுடன் இணைந்துள்ளவர்களுக்கு அமைச்சு மற்றும் ஆளுநர் பதவிகளை கொடுத்து கிழக்கு மாகாணத்தை துரித கதியில் முன்னேற்றுவதே எங்கள் முதல் நோக்கமாகவுள்ளது.

16 ஆம் திகதிக்குப் பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலுள்ள அனைத்து கிராமங்களையும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வோம் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களாக உங்களை தெரிவுசெய்ய வைத்து அமைச்சுப் பதவிகளை கொடுத்து தொகுதி முழுவதிற்குமான கமத் தொழிலுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவுள்ளோம்.

தங்கத்தினாலான வளையல்களை அணிந்திருந்த தாய்மார்களின் கைகள் இன்று நல்லாட்சி அரசில் அடகுவைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதுடன், தாய்மார்களின் முகங்களிலும் கஷ்ட நிலைமை தென்படுகிறது. இவ்வாறான நிலையினை வெகு விரைவில் மாற்றியமைப்போம்.

விவசாயிகளுக்கு நீர் மற்றும் பசளைகளை பெற்றுத்தருவதுடன் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்துவோம் என்பதை இவ்விடத்தில் உறுதிப்படுத்துகின்றோம்.

பயிரிடப்படாத நிலங்களை பயிரிடப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து தமிழ் மக்களின் கஷ்டங்களை நீக்கி செழிப்பான ஒரு செளபாக்கிய நிலைக்கு இட்டுச்செல்ல இருக்கின்றோம் என்றார்.

மண்டூர் குறூப் நிருபர்

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை