அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள இத்தொடரில், அவுஸ்திரேலிய அணிக்கு டிம் பெய்ன் தலைமை தாங்குகிறார்.

மேலும், 14 பேர் கொண்ட அணியில் கமரூன் பான்கிராப்ட், ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் மற்றும் மைக்கேல் நேசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருற்த மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் சிடில் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம், டிம் பெய்ன் தலைமையிலான அணியில் கேமரூன் பான்கிராப்ட், ஜோ பர்ன்ஸ், பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லேபுஸ்சேன், நாதன் லியோன், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பெட்டின்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மெத்தியூ வேட், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 21ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, முதலில் நடைபெற்ற ரி-20 தொடரை 2--0 என இழந்தது.

இந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரிலாவது வெற்றிபெற்று ஆறுதல் அடையும் முனைப்பில் பாகிஸ்தான் அணி, காத்திருக்கின்றது.

இரு அணிகளும் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 31 முறை அவுஸ்ரேலியா அணியும், பாகிஸ்தான் அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 18 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

இரு அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இறுதியாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1--0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதில் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை