அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் திண்மக் கழிவு முகாமைத்துவமும் மர நடுகை நிகழ்வும்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் செயற்பட்டு வரும் சுற்றாடல் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவமும் மர நடுகை நிகழ்வும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், சூழல் மாசடைவதைத் தடுக்கும் செயன்முறை பற்றியும் துறைசார் வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

நாளாந்தம் பாடசாலையில் ஒன்று சேரும் திண்மக் கழிவுகளை தரம்பிரித்து அதனை முகாமைத்துவம் செய்தல், கழிவுப் பொருட்களைக் கொண்டு பயன்தரும் செயன்முறையினைக் கையாள்தல், வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் திண்மக் கழிவுகளை பயன்பெறச் செய்தல் போன்ற விடயங்கள் மாணவர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது செயன்முறைப் பயிற்சிகள் மூலமாக விளக்கமளிக்கப்பட்டன.

காடழிப்பினால் மக்கள் எதிர்நோக்கி வரும் ஆபத்தான நிலைமையினை குறைக்கும் வகையில் இதன்போது பாடசாலை வளாகத்தில் மர நடுகை வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர்கள் எம்.ஏ.நிஸாம், ஏ.எல்.சுஹைப், சுற்றாடல் கழக பொறுப்பாசிரியர் ஏ.எல்.எம்.நவாஸ், ஆசிரியைகளான எம்.சி.நஸ்மியா, எம்.என்.நசீஹத் பானு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று கமநல சேவை நிலையத்தின் விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.றியாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை