ஆப்கானுடனான ஒரேயொரு டெஸ்ட் போட்டி: மே.தீவுகள் அணி வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, அந்த அணிக்கெதிரான முதல் டெஸ்ட் வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி பதிவு செய்தது.

லக்னொவ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜாவீட் அஹமடி 39 ஓட்டங்களையும், அமிர் ஹம்ஸா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ராகீம் கோர்ன்வோல் 7 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், ஜோமல் வோரிக்கன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஷமர் ப்ரூக்ஸ் 111 ஓட்டங்களையும், ஜோன் கெம்பல் 55 ஓட்டங்களையும், ஷேன் டவ்ரிச் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், அமிர் ஹம்ஸா 5 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், சஹீர் கான் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 90 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 31 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது, ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜாவீட் அஹமடி 62 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ராகீம் கோர்வோல், ரோஸ்டன் சேஸ், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி, 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது கிரைஜ் பிரத்வெயிட் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஜோன் கெம்பல் 19 ஓட்டங்களுடனும், சாய் ஹோப் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அமிர் ஹம்ஸா 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் என மொத்தமாக விக்கெட்டுகளை சாய்த்த மேற்கிந்திய தீவுகளின் ராகீம் கோர்ன்வோல் தெரிவு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்தது.

இதில் ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றியது. ரி-20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை