ஆப்கானை வீழ்த்தியது மே.தீவுகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் எளிதாக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. லக்னொவ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 11 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஸ்ரதுல்லா சஸாய் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ரஹமட் ஷா களத்தில் நங்கூரமிட்டார்.

எனினும், மறுமுனையில் இருந்த மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜாவீட் அஹமடி 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களம்புகுந்த இக்ரம் அலி கில், ரஹமட் ஷாவுடன் ஜோடி சேர்ந்து 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது இக்ரம் அலி கில், துரதிஷ்டவசமாக 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா சத்ரான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலேயே, ஓய்வறை திரும்பினாhர்.

அடுத்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கான், ரஹமட் ஷாவுடன் ஜோடி சேர்ந்து 26 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, ரஹமட் ஷா, 61 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அஸ்கர் ஆப்கான், ஒருபுறமிருக்க அடுத்தடுத்து களமிறங்கிய எந்த வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை.

மொஹமட் நபி 1 ஓட்டத்துடனும், குலாப்தீன் நயீப் 17 ஓட்டங்களுடனும், ரஷித்கான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், நவீன் உல் ஹக் 1 ஓட்டத்துடனும், அஸ்கர் ஆப்கான் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி ஆப்கானிஸ்தான் அணி, 45.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர், ரொமாரியோ செப்பர்ட் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல் மற்றும் ஹெய்டன் வோல்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 12 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் களத்தில் தாக்குபிடித்தனர்.

எவீன் லீவிஸ் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிம்ரொன் ஹெட்மியரும் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு களமிறங்கிய ரொஸ்டன் சேஸ், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து 163 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார். ரொஸ்டன் சேஸ், 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாய் ஹோப் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களுடனும், நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழக்காது 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, 46.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு மேற்கிந்திய தீவுகள் அணி, வெற்றி இலக்கை கடந்தது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட்டுகளால் எளிதாக வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடங்களாக 94 ஓட்டங்களையும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரொஸ்டன் சேஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை லக்னொவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை