சஜித் கூறியவற்றை செய்ய வைப்பது எமது பொறுப்பு

வெற்றியை எமது கைகளில் தாருங்கள்

சஜித் பிரேமதாச வெற்றி பெறச் செய்து அந்த வெற்றியை எங்களின் கைகளில் கொடுங்கள். அதன்மூலம் சஜித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நாம் தேர்தலுக்கு பின்னர் செய்விப்போம். அதனை நாம் முன்நின்று செய்விப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் உறுதியளித்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் நேற்று யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக அனைத்து விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எமது அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறானதை அவரின் தேர்தல் அறிக்கை சொல்லவில்லை. மாறாக எமது பிரச்சினைகள் பலவற்றை அதில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது மட்டும் தான் எமக்குத் தெரியும். செய்வாரா இல்லையா என்பது அடுத்த பிரச்சினை.

சொல்வதற்கான துணிவு அவரிடம் இருந்துள்ளது. கோட்டாவிற்கு எதையும் சொல்வதற்கான மனம் இருக்கவில்லை. சஜித் எமக்கு தீங்கு செய்யாதவர். நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்துவிட்டார்கள் எனக் கூறுகிறார்கள்.

நிபந்தனையற்ற ஆதரவு என்று யார் சொன்னது. எங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வாறானது என படித்துப் பார்க்க வேண்டும்.

நிபந்தனை என்று யாரும் சொல்லவில்லை. செய்வேன் என பலவற்றைச் சொல்லியிருக்கின்றார். அவரை செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் தான் இருக்கின்றது.

தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையே ஆணை கொடுத்து பிரதிநிதிகளாக நியமித்துள்ளீர்கள். மற்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுடனும் பேசுகின்றோம். ஒருவரையும் உதாசீனம் செய்யவில்லை. எமது கையில் தான் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது.

அதை நாங்கள் உதாசீனம் செய்ய முடியாது. அந்த ஆணையை நிறைவேற்ற, பல இணக்கப்பாடுகளுக்கு வந்திருக்கின்றோம். தேர்தலுக்குப் பின்னரும், சொன்னவற்றை செய்ய வைக்க வேண்டிய பொறுப்பும் எங்களுடையது.

மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்திலான உடன்பாடு ஒன்று ஏற்பட்டது. அந்த இதயத்திலான உடன்பாடு பற்றி நக்கல் பேச்சு. ஆனால், எதுவும் நடந்து முடியவில்லை என்பது அப்பட்டமான பொய்.

எத்தனையோ ஆயிரக் கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டன. நிலம் எமது அரசியல் இருப்பின் ஆணி வேர்.

நிலமின்றி சமூகம் மற்றும் தேசம் இருக்க முடியாது. நிலத்தை அபகரித்து முழுமையாக பிரித்து வைத்திருந்தவர்களிடத்தில் இருந்து, காணிகள் விடுவிக்கப்பட்டன. இன்னும் விடுவிக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென உண்மை கண்டறியப்பட வேண்டும். காணாமல் போனோர்களுக்கான அலுவலகம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பித்த போது, ராஜபக்ச கும்பல் தடுக்க முயற்சி செய்தார்கள்.

எனவே ஒன்று சேர்ந்து அனைத்து தமிழ் மக்களும் வாக்களியுங்கள். சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்யுங்கள்.

அந்த வெற்றியை உங்களின் பிரதிநிதிகளாக எங்களின் கைகளில் கொடுங்கள். நாங்கள் அதை முன்நின்று செயற்படுத்துவோம் என்றார்.

 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை