சர்வதேச நீதிமன்றில் மியன்மாருக்கு ஆதரவாக ஆங் சான் சூச்சி ஆஜர்

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி, தமது அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் விவாதிக்கவுள்ளார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதில் மியன்மார் அரசாங்கத் தரப்புக் குழுவை சூச்சி வழிநடத்திச் செல்லவுள்ளார்.

ரொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனப் படுகொலையை மேற்கொண்டதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.

சூச்சி, மியன்மாரின் நலனைத் தற்காத்து நீதிமன்றத்தில் செயற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இருந்து, மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இராணுவம் வன்முறை தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, சுமார் 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியா முஸ்லிம் மக்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான காம்பியாவே மியன்மாருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. 57 உறுப்பு நாடுகள் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இதற்கு ஆதரவு வெளியிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாட்டுக்கு மாத்திரமே வழக்குத் தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொஹிங்கிய மக்கள் மீதான பிரச்சினை குறித்து மின்மார் சர்வதேச சட்டத்திற்கு முன் முகம்கொடுக்கும் முதல் சந்தர்ப்பமாக இது உள்ளது. இதில் நேரடி தொடர்பற்ற ஒரு நாடு வழக்குத் தொடுத்திருப்பது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

“காம்பியா தொடுத்திருக்கும் வழக்கிற்கு எதிராக வாதாட முன்னணி சர்வதேச வழக்கறிஞர்களை மியன்மார் நியமித்துள்ளது” என்று சூச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காம்பியா மற்றும் மியன்மார் இரு நாடுகளும் 1948 இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அது நாடுகள் இனப்படுகொலையை தடைசெய்வது மாத்திரமன்றி ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இனப்படுகொலையை தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கு வலியுறுத்துகிறது.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை