தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ரிசோபனுக்கு வெண்கலப் பதக்கம்

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுநரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலையின் மாணவன் சோதீஸ்வரன் ரிசோபன் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டித் தொடரில் 21 வயதுக்குட்பட்ட 67 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான குமித்தே இறுதிப் போட்டியிலேயே வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் காட்டா பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்ததுடன், மலேசியாசில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேசப் பாடசாலைகளுக்கிடையிலான காட்டா போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும், குமித்தே போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருந்தார்.

அதேபோல் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் சோதீஸ்வரன் ரிசோபன் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தினை வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் சுந்தரலெட்சுமியின் கனிஷ்ட புதல்வனான இவர், கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதானாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒய்வு நிலை பதவிநிலை உதவியாளருமான சிகான் கே. கேந்திரமூர்த்தியின் நேரடிப் பயிற்றுவிப்பின் கீழ் பயிற்சி பெற்ற வீரர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை