எதிர்காலத்திற்கு ஏற்ற இளைஞர்களின் தெரிவு சஜித் பிரேமதாச

நாட்டின் இன்றைய இளைஞர்கள் தமது எதிர்காலத்துக்குப் பொருத்தமான தலைவராக சஜித் பிரேமதாசவையே எதிர்பார்க்கின்றனர். அவரையே கேட்கின்றனர். தங்களுடைய எதிர்காலம் சுபீட்சமாக இருக்க வேண்டுமேயானால் சஜித் பிரேமதாச போன்ற ஒரு இளம் தலைவரே அவசியம் எனக் கருதுகிறார்கள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நவீன டிஜிட்டல் யுகத்துக்குள் முன்னேறிச்செல்வதே எமது இளம் சந்ததியினரின் எதிர்பார்ப்பாகும். அந்த யுகத்தை உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித்தான் என அவர்கள் நம்புவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ. தே. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஆனமடுவ, கம்பஹா, கடவத்த, நீர்கொழும்பு, தெஹிவளை, லுனாவ ஆகிய இடங்களில் இடம்பெற்றன.

இக் கூட்டங்களில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் உரையாற்றுகையிலேயே பிரதமர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எமது இளைஞர்கள் எதிர்பார்க்கும் 6ஜி டிஜிட்டல் சமூகத்தை உருவாக்கித் தரக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்று காணப்படுகின்ற சமூக முறையில் மாற்றம் வரவேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். எவருடைய தயவிலும் தங்கியிராமல் சுதந்திரமாக இயங்கும் நிலை தமக்கு வேண்டும் என்று

எதிர்பார்க்கிறார்கள். இளைய சமுதாயத்தின் அந்த எதிர்பார்ப்பை நாங்கள் நிராகரித்துவிட முடியாது.

இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், உட்பட பல்வேறு திட்டங்களை நாம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த 70 ஆண்டு காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. என்றாலும்கூட இப்பொழுதிருக்கும் சுதந்திரத்தைவிட தங்களுக்கு மேலும் சுதந்திரம் வேண்டுமென்றே இளைஞர்கள்கேட்கிறார்கள். இந்த கணனி யுகத்தில் என்னவெல்லாம் இருக்கின்றதோ அத்தனையும் தமது கைக்குள் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களது கனவுகளை நனவாக்குவதற்கு நல்லதொரு தலைவரை அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்தனர். எதையுமே பெற்றுத்தர முடியாத அரசியல்வாதிகள் எமக்கு அவசியமில்லை. எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி த்தரக்கூடிய ஒருவரையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

 எம். ஏ. எம். நிலாம்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை