தபால்மூல வாக்களிப்பு சுமுகம்; இன்றும் வாக்ெகடுப்பு தொடரும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. தபால்மூல வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

தபால்மூல வாக்களிப்பின் முதல் நாளான நேற்று வாக்குப்பதிவுகள் யாவும் மாலை 5 மணியுடன் நிறைவுற்றது. இன்றைய தினமும் தபால் மூல வாக்களிப்பு காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்காக நாடளாவிய ரீதியில் 7920 வாக்களிப்பு நிலையங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அமைத்துள்ளது.

தபால்மூலம்

வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலேயே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6,59,515 பேர் தகுதிப்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியும். காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைக்காக தேர்தல்கள் செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், கபே மற்றும் பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தபால்மூலம் வாக்களிப்பு இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை