நானும் அரவிந்தவும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தால் உரிய விசாரணை நடத்துங்கள்

லக்னோ டெஸ்ட் தொடரில் நானும் அரவிந்த டி சில்வாவும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தமாறு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கிரிக்கெட் சபை விசாரணை நடத்தி தங்களை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது வீணாக குற்றச்சாட்டு முன்வைப்பதாகவும் கூறினார்.

விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொகுகே, திலங்க சுமதிபால எம்.பி ஆகியோர்

இது தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இதற்கு பதிலளித்த அவர், விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலத்தினூடாக விளையாட்டுத் துறையில் இருந்து ஊழல் மோசடி, ஆட்ட நிர்ணயம் என்பவற்றை தடுக்க முடியும் எனவும் கடந்த கால தவறுகள் குறித்து விசாரணை நடத்த முடியுமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறுகையில்,

காமினி லொகுகே கூறியதை போன்று ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுடன் தொடர்புள்ள சகலரும் தண்டிக்கப்பட்டனர். எனக்கும் அரவிந்த டி சில்வாவிற்கும் கூட ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபையினால் விசாரணைகள் நடத்தப்பட்டன. டெஸ்மன்ட் பெர்னாண்டோ இது தொடர்பான விசாரணைகளை செய்தார். இறுதியாக நானும் அரவிந்தவும் விடுவிக்கப்பட்டோம். குப்தா என்ற நபர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவ்வாறான நபரை சந்திக்கவில்லை. என்னிடம் மூன்று மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டது. எனக்கும் அரவிந்த டி சில்வாவிற்கும் எதிராக கூறும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்துங்கள்.

2008 இல் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காமினி லொகுகேவிற்கு இது தொடர்பான சட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.

நான் கிரிக்கெட் சபை தலைவராக இருந்த போது நடந்த இந்திய சுற்றுப்பயணத்தினூடாக 14 முதல் 15 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்க இருந்தது.

ஆனால் 3.5 மில்லியன் டொலர்கள் தான் கிடைத்தன. எனக்குப் பதில் அமைச்சு செயலாளரை தான் அங்கு அனுப்பினார்கள். விளையாாட்டு அமைச்சர்கள் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிக்காக பணம் பெற்ற விடயங்கள் அம்பலமாக வேண்டும்.

திலங்க சுமதிபால தொடர்பில் (ஐ.சி.சி) சர்வ தேச கிரிக்கெட் சபை அனுப்பிய கடிதங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் நாம் சமர்ப்பிக்கின்றோம். எம்மீது குற்றம் சுமத்தும் அனைவருக்கும் ஒரு பிரதியையும் அனுப்பவேண்டும். சூதாட்டத்துடன் தொடர்புள்ளவர்களை பாதுகாப்போர் எதிரணியில் உள்ளனர்.கிரிக்கெட் சபையில் உள்ள உபதலைவர் ஒருவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட் சபை உறுப்பினர்களின் குடுப்பத்தினர் சென்றுள்ளனர். இவர்களுக்கு நாளாந்தம் 750 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த காமினி லொகுகே எம்.பி,

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த ஆரம்ப காலங்களில் இதனை கட்டுப்படுத்த (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபைக்கென்று சட்டம் ஒன்றும் இருக்கவில்லை. லக்னோ டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ​போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தானிய வீரர் சலீம் மலிக், இங்கிலாந்தின் அலக்ஸ்ஸ்டுவர்ட், நியுசிலாந்தின் மார்டின் க்ரோ, இந்திய வீரர் அசாருதின் ஆகியோரும் இலங்கையின் இரண்டு வீரர்களும் பிடிபட்டார்கள். குப்தா என்ற இந்திய நபர் ஒருவரின் மூலமாக பணம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபையிடம் அப்போதும் இது குறித்து ஆராய சட்டம் இருக்கவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் சபையின் மூலமாக குறித்த சி.பி.ஐ அறிக்கையை வைத்துகொண்டு குறித்த வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை நடத்தி குறித்த இரண்டு வீர்கள் குற்றம் செய்யவில்லை என கூறவில்லை. எனினும் (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபை சட்டம் இல்லாத காரணத்தினால் (ஐ.சி.சி)க்கு அமைய தவறு என சட்டமாக்கப்படாத காரணத்தினால் இது தவறில்லை என்றே இலங்கை கிரிக்கெட் சபை கூறியது. எவ்வாறு இருப்பினும் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்பதே உண்மை. விளையாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் கடுமையான விளையாட்டு சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றார்.

(ஷம்ஸ் பாஹிம்)

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை