கராத்தே போட்டிகளில் பிரகாசித்த மாணவர்கள் கௌரவிப்பு

சர்வதேச ரீதியில் கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலைகளுக்கிடையிலாக தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற ராம்கராத்தே சங்க மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று ராம்கராத்தே கிளை மாணவர்களை தரப்படுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் (28) நடைபெற்றது.

ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதானாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளருமான சிகான் கே. கேந்திரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், யுகே.ஆர்.ஏ கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் கென்சி கே.ரவிச்சந்திரன் கென்சி எம்.பி.செயிலாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் கராத்தே தரப்படுத்தல் போட்டிகள் இடம்பெற்றன. பின்னர் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறிப்பாக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் ராம் கராத்தே சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு 73 பதக்கங்களை பெற்றுக் கொடுத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இப்போட்டிகளில் 67 மாணவர்கள் பங்கேற்று 43 தங்கம் 12 வெள்ளி 18 வெண்கலப்பதங்கங்களை பெற்றுக்கொடுத்தனர். தேசிய ரீதீயில் இடம்பெற்ற போட்டியில் கராத்தே காட்டாவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் சறோன் சச்சின் மற்றும் பொலநறுவையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் குழுக்காட்டாவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்ற பி.சறோன் சச்சின், எஸ்.சறாஜ், முகமட் எஸ்.ரிசோபன் உள்ளிட்டவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர். விசேடமாக கடந்த 2017 ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற கராத்தே போட்டி நிகழ்வொன்றில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு இரண்டு தங்கமும் வெள்ளிப்பதக்கம் ஒன்றினையும் வென்று ராம் கராத்தே சங்கத்திற்கும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் எஸ்.ரிசோபன் விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் அம்மாணவன் இவ்வருடமும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை