இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

அத்தோடு, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான 60 புள்ளிகளையும் நியூஸிலாந்து அணி, பெற்றுக் கொண்டது.

மவுண்ட் மவுண்கானி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 353 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் இங்கிலாநது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 91 ஓட்டங்களையும், ஜோ டெபன்லி 74 ஓட்டங்களையும், ரொறி பர்ன்ஸ் 52 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 615 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக பிஜே வாட்லிங் 205 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 126 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும், ஜெக் லீச் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெப்ரா அமைச்சர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 262 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 197 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக ஜோ டென்லி 35 ஓட்டங்களையும், ரொறி பர்ன்ஸ் 31 ஓட்டங்களையும், ஜொப்ரா அமைச்சர் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோமி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிஜே வாட்லிங் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 28ஆம் திகதி ஹமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை