"மஹிந்தவுக்கு புகட்டியது போன்று கோட்டாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும்"

"மஹிந்தவுக்கு புகட்டியது போன்று கோட்டாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும்"-MIM Mansoor-People Must Teach Good Lesson to Gotabaya Rajapaksa Like Mahinda

பாலமுனையில் எம்.ஐ.எம். மன்சூர்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றுத் தோல்வியினை சந்தித்த பெரியதோர் அனுபவமும் பாடமும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இருக்கின்ற போதிலும் மீண்டும் இனவாத கோஷத்தோடு மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றார்.

இவருக்கும் நமது சிறுபான்மைச் சமூகம் தக்க பாடத்தினை புகட்டியே ஆக வேண்டும் என அம்பாறை (திகாமடுல்ல) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் பாலமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கிய மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் அத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். இதற்காக இனவாதத்தினை கையில் எடுத்து செயற்பட்டார். ஆனால் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் அவருக்கு கிடைக்காததன் விளைவால் அவர் தோல்வியினை எதிர்நோக்கினார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் நினைப்பது போல ஆட்சி பீடம் ஏறினால், எமது சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பிற்கான நிலைமை எவ்வாறு அமையப் போகின்றது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அணியில் உள்ளவர்களை அவதானித்துப் பாருங்கள்.

எவ்வாறான இயக்கங்களை உருவாக்கினார் என்றும், அவ் அமைப்புகளின் தலைமைகளுக்கு அவர் வழங்கிய பொறுப்புக்கள் என்ன என்றும் நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது மிக முக்கியமானதாகும். இந்த நாட்டை முழு பௌத்த தேசமாக மாற்ற வேண்டும் எனவும், சிறுபான்மைச் சமூகத்தினர் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பதை இல்லாதொழிக்கும் நிலைபாட்டில் உள்ளார்.

பௌத்த நாடென்று தம்பட்டம் அடிக்கின்றோம் செல்கின்ற பாதைகள் எல்லாம் பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. முஸ்லிம் நாடுபோல் இந்நாடு காணப்படும் நிலைமையினை ஒழித்துக் கட்ட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் இந்நாட்டின் ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவே கூடாதென்று எமது சமூகத்திற்கெதிராக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தங்களுடைய இனத்தினைச் சேர்ந்தவர்களையே கொடூரமாக நடத்திய வரலாறுகளைக் கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவின்றி இந்நாட்டின் ஆட்சி பீடம் ஏறினால் சிறுபான்மைச் சமூகத்தினர் எந்த வகையிலும் அரசியலில் இருக்க முடியாது போய்விடும். இவ்வாறான கோத்தபாயவிற்காக வாக்குக் கேட்கின்ற முஸ்லிம் சமூகத்தினப் பாதுகாக்க ஒருபோதும் முடியவே முடியாது.

எம்மவர்கள் அனைவரும் கடந்த கால கசப்பான நிலைமைகளையும் பிரிவினைகள் போன்றவற்றை மறந்து ஒற்றுமைப்பட வேண்டியது காலத்தின் தற்போதைய தேவையாக உள்ளது. எமது சமூகம் கொத்தடிமைகளாக நடத்தப்படவுள்ள ஓர் அரசியல் ரீதியான ஆட்சியினை ஸ்தாபிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

இதற்காக சோரம் போகின்றவர்கள் ஒருவரேனும் நமது சமூகத்தில் இருந்து விடவும் கூடாது. தன்னுடைய சுய நலப் போக்கு மிக்க ஆதரவு எமது சமூகத்தினை நட்டாற்றில் கொண்டு போய்ச் சேர்க்கின்றதோர் நிலைமையினை எந்த ஒருவராலும் இடம்பெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றார்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் - எம்.ஏ. றமீஸ்)

Sun, 11/03/2019 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை