ஈராக் தலைநகர வீதிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் முடக்கம்

ஈராக்கில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் தலைநகர் பக்தாதுக்கான பிரதான வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர்.

பொலிஸார் தலையிடாமல் பார்த்திருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய சந்திகளில் வாகனங்களை நிறுத்தி அந்த வீதிகளில் தடங்கலை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிக தொழில்வாய்ப்புகள், ஊழல் ஒழிக்கவும் சிறந்த அரச சேவைகளையும் கோரி ஆர்ப்பாட்டம் இரண்டாவது முறையாகவும் கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகிறது. பாதுகாப்பு படையினருடனான மோதல்களில் இதுவரை 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் தமக்கு மாற்றாக ஒருவரை நியமிப்பதில் இணக்கத்திற்கு வந்தால் தாம் பதவி விலகுவதாக ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

தலைநகர பிரதான வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடக்கினர். கடந்த ஒக்டொபர் பிற்பகுதி தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர். தொடரும் போராட்டங்கள் காரணமாக பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

“ஊழல்வாதிகள் மற்றும் திருடர்கள் துரத்தப்பட்டு அரசாங்கம் வீழ்த்தப்படும் வரை எமது ஆர்ப்பாட்டம் தொடரும் என்று அரசாங்கத்திற்கு கூறுவதற்காகவே நாம் வீதிகளை முடக்க தீர்மானித்தோம்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 25 வயது தஷீன் நசார் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் மையமாக பக்தாதின் தஹ்ரிர் சதுக்கம் மாறியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கிருந்து அருகில் இருக்கும் பாலத்தை கடந்து முன்னேறிச் செல்ல முயன்று வருகின்றனர். இந்த பாலத்திற்கு அப்பால் அரச கட்டடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற பதற்ற சூழல் பக்தாதின் தென் கிழக்காக கூட் நகரிலும் நீடித்து வருகிறது. தெற்காக மேலும் பல நகரங்களிலும் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை